கண்ணதாசன் காரைக்குடி............


அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுப் போகும் செய்தி என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, எதற்கு செய்தியெல்லாம் விட்டுப் போக வேண்டும்? ஒண்ணுமே சொல்லாமல் போனால் என்னாகும் என்றும் யோசிக்க வைக்கிறது...?

மகாத்மா காந்தி என்ன சொல்லி விட்டுப் போனார்?
எதுவும் சொல்லிவிட்டுப் போக வில்லை.

சொல்ல வேண்டியதை வாழ்ந்து காட்டி விட்டுப் போனார்.

அப்படி வாழ்ந்து காட்டிப் போனால், நம் அடுத்த தலைமுறை அதைப் பற்றி யோசிக்காதா என்ன?

................இப்படியெல்லாம் யோசனையோடு படுத்துக் கொண்டிருந்த போது தொலைக்காட்சியில்,
வாணாம் மச்சான் வாணாம் இந்த பொண்ணுங்க காதலு...
மூடி தொறக்கும் போதே தலை கவிழ்க்கும் குவாட்டரு...
என்கிற வரிகள் காதில் விழுந்தது.

சிந்தனை கலைந்து, சிதிலமாகிக் கொண்டிருக்கும் திசை நோக்கி என் கவனம் திரும்ப,
‘கண்ணதாசன் காரைக்குடி, பேரைச்சொல்லி ஊத்திக் குடி..
குன்னக்குடி மச்சானைப் போல் பாடப்போரெண்டா....’

என அடுத்த் நேயர் விருப்பம், அதிரடியாய் என் நெஞ்சைத் தாக்கியது.

இதைவிட கவனிக்க வேண்டிய கவலையான விஷயம் அடுத்த கட்டம்தான்.

மேற்படி பாடல்களின் அடுத்தடுத்த வரிகளை சர்வ சாதாரணமாக, ஏழுவயது பையன் பாடிக்கொண்டே போனதுதான்.

சமீபத்தில் ஒரு கல்லூரி முதல்வரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கவலையோடு பகிர்து கொண்டவிஷயமும் இது தொடர்பானதே - கல்லூரி மாணவர்களின் போதை பழக்கம்.

மிக எளிதாக இந்தப் பழக்கம் பிஞ்சுகளிடம் தொற்றிக் கொள்ளக் காரணம் அரசின் கொள்கை...இல்லை கொள்ளை!

 இலக்கு வைத்து சாராய வியாபாரம் செய்யும் அரசு, ஒரு வருடத்தில் முடிக்க வேண்டிய தோண்டிய சாலைகள் ( ஈரோடு சம்பத் நகரில், மாவட்ட ஆட்சியர் தினசரி செல்லும் சாலை எப்படி இருக்கிறது தெரியுமா?- இதை இலக்கு வைத்து திருத்தலாமே?) , கட்டண,கட்டணமில்லா கழிப்பிட வசதிகள், பள்ளிக்கு கட்டிடங்கள் மற்றும் நூல்கள்,.....இப்படி இலக்கு தேவையான பணிகள் நிறைய இருக்க, எதற்கு இதற்கோர் இலக்கு?

ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட நிறைய (கல்லூரி)மாணாக்கர்கள் ‘சரக்,சரக்’  என புத்தகங்களைப் புரட்டிய வேகம், அவர்களின் மூச்சுக் காற்றில் இருந்த ‘சரக்கு’ வேகத்தால்தானெனப் புரிந்தது.

‘ஈரோடு வாசிக்கிறது’ என நிரூபித்துக் காட்டிய மாணவ(வே)ர்கள் ஏன் இம்மாதிரி சிலவற்றை நேசிக்கிறார்கள்?

இந்த சாராய வியாபாரத்தில்தான் அரசு மின் ஆட்டுக்கல்லும், அரைவை இயந்திரமும், மிந்விசிறியும்,மாணவர்களுக்கு விலையிலா மடிக்கணிணியும் வழங்கமுடியும் என்றால், அதற்காய் இளைய தமிழகம் தரும் விலை என்ன தெரியுமா?



தங்களின் வாழ்வாதாரமும், எதிர்காலமும்.

கண்ணை விற்று சித்திரம் வாங்கியதாய் முடியும் இந்த அரசு வியாபாரம்.

பள்ளிக்கு அருகில் மட்டுமல்ல........கல்விக்கு அருகில் கூட வரக் கூடாது இந்த போதை பொருள்களின் நடமாட்டம்.


இன்னுமொரு தலைமுறை காக்க, இதை செய்தால் என்ன நட்டம்? 

Comments

Popular Posts