Friday, February 05, 2016

அரண்மனையின் முறைமாமன்

1995.

'முறைமாமன்' வெளியானபோது நான் திருப்பூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று அறிமுகமாகிற புது இயக்குனர்களின் படத்தையெல்லாம் அவ்வளவு சாதாரணமாக பார்த்துவிடுகிற  ஜாதியில்லை நான்.
இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் திரைக்கல்லூரி மாணவர்கள் கோலோச்சிக்கொண்டும், புதியவர்களை விஜயகாந்த் போன்றவர்கள் வரவேற்றுக்கொண்டும் இருந்த காலகட்டம்தான்.
இது அப்போதைய வரவுகளில் கொஞ்சம் 'கலகல' படமாக பேசிக்கொள்ளப்பட்டது.  புதிய இயக்குனர் , ஸ்டார் வேல்யூ இல்லை....நான் பார்க்கவே இல்லை.

சுந்தர்.சி. அதன் இயக்குனர் , படத்தின் நாயகி குஷ்பூவுடன் இணைத்து பேசப்பட்ட போதுதான் திரும்பி பார்க்க நேர்ந்தது. ஏனெனில் அப்போது 'குஷ்பூ - பிரபு' பிரச்சினையும் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் சூப்பர்ஹிட் ஜோடியாக அறியப்பட்டிருந்தார்கள்.

இந்த கட்டத்தில் மூன்றாவதாக அவர் செய்த படம்தான் 'சூப்பர்டூப்பர்' - உ.அ.தா.


'சிவாஜி-சந்திரபாபு' காம்பினேஷனின் 'சபாஷ் மீனா' வின் லேடெஸ்ட் வர்சன் எனப்பட்டாலும், காமெடித்தன்மையால் தொடையழகிக்கு வாழ்வளித்தபடம். கார்த்திக் எங்கோ போய்விட உதவியதும் இதுவே.
உடனடியாக கார்த்திக்குடன் 'மேட்டுக்குடி'. அது 96 வாக்கில் வெளியானது.  சுந்தர்.சி. என்றால் செம காமெடி என பதிவாயிற்று.
எனது திருமண வருடமான 1997 இல் ரஜினியுடன் 'அருணாச்சலம்'...அந்த பதிவினை காலி செய்தாயிற்று. அதே வருடத்தில் 'ஜானகிராமன்' அந்த குறையை போக்கிற்று எனலாம்.
 பிற்பாடு நான்கைந்து வருஷங்கள் சில படங்கள்.....குறிப்பிட ஒன்றுமில்லாமலே !2003 இல் தான் மீண்டும் அவர் பேசப்பட்டார்..... அன்பேசிவம்.
கமலுடன் இணையும் போது, பீரிட்டுக் கிளம்பும் மஹா காமெடியாக இருக்கும் என நினைத்தால், நிச்சய சீரியசாக ஒருபடம். கார்ட்டூனிஸ்ட் மதன் கைவண்ணத்தில்
வசனத்தில் கல்கண்டுகள். நான் ரிடையர்ட் ஆனபின் என் பொண்ணுகள் நீ பண்ண படம்லாம் எதுப்பா என கேட்டால் 'அன்பேசிவம்' தான் என் முதல் சாய்ஸ் என பெருமை பேட்டி கொடுத்தார், சுந்தர் சி.

கமலுக்கு இணையாக, மாதவன் பிரமாதமான சாய்ஸ். எத்தனை முறை பார்த்தாலும் புதிய மெசேஜ் இதில் இருக்கும். வித்யாசாகருடன் புதிய இசை முயற்சி.

அதே வருடம் - வின்னர்.
இன்றைக்கு ....12 வருடங்களுக்கு பின்னர் - அதாவது 2015-பெப்ரவரியில் பிரசாந்தின் 'சாகசம்' படத்துக்கான பேட்டியில் இயக்குனர் தியாகராஜன் இது வின்னர் பட ஜாலியை தரும் என குறிப்பிட்டுள்ளார். அவ்வளவு சிரிப்புத்தீபாவளியாய் வடிவேலுடன், கலந்தார்.

தொடர்ந்து காமெடி கலந்த காதல், மோதல்...என 12 வருடம் ஓட்டிவிட்டு சென்ற வருடம், பேய் சீசனில் ஐக்கியமான படம்தான் அரண்மனை.
பேயோட்டம் ஓடிய மஹா காமெடி திகில்.

அதே வேகத்தில் அதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வெற்றி கொடி பறக்க விட்டுள்ளார்.
படத்தின் செம திகிலே இதில் 'குஷ்பூவின் டான்ஸ்'தான் என நக்கலடிக்கப்பட்டாலும் பொடிசுகள் விரும்பி பார்க்கிற காஞ்சனாவாய் இருக்கிறது இது....

இரண்டாவது படத்தில் காணாமல் போன எத்தனையோ இயக்குனர்களை பார்த்துவிட்டோம். ஜானர் மாற்றி, ஜானர் மாற்றி, இன்னும் 20 வருடங்களாய்
தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என இன்னும் 'தகுதி உள்ளது தப்பி பிழைக்கும்' எனும் வாழ்வியல் தத்துவத்தை போத்தித்துக் கொண்டிருக்கிற சுந்தர் இன்றைய இளம் இயக்குனர்கள் - இணை இயக்குனர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய கமெர்சியல் பாடப்புத்தகம்.


விரைவில் 'கலகலப்பு -2' இருப்பதாய் அறிகிறோம்....

வாழ்த்துக்கள் சுந்தர்.சி.