Saturday, September 28, 2013

ஆடி அடங்காத ஆட்டம் !

“வேல்ஸ்...வீட்டுக்கு வந்தாச்சா ?” இரவு ஒன்பது மணி, என் நண்பர் பரபரக்க தொலைபேசினார்.

“இன்னும் இல்லை, என்னா விஷயம் ?” அந்த தீவிரம் எனக்கும் தொற்றிக்கொண்டது.
“இன்னிக்கு மேட்ச் இருக்கு வரீங்களா?”

“என்ன பாஸ்,நான் என்னிக்கு நைட்ல கண்ணு முழிச்சு கிரிக்கெட் பார்த்திருக்கேன்?”

“அட...அதில்லை. நீங்க கிரிக்கெட் பாக்கற லச்சணம் எனக்கு தெரியாதா?, நடு நடுவே  நீங்க அடிக்கற கமெண்டுக்குத்தான் இங்க ஒரு ரசிகர் கூட்டமே இருக்கே, எங்க அப்பா உட்பட....”

“ ..........................”

“என்ன வரீங்களா, இல்லையா?”

“வரேன், வரேன்.....” என்று சொல்லிவிட்டு, மனசுக்குள் ‘வந்து தொலைக்கறேன்’ என்று சொல்லிக்கொண்டேன்.

தீவிர கிரிக்கெட் ரசிகரான என் நண்பர், லீவு போட்டுவிட்டு விளையாட்டை ரசிப்பது மட்டுமில்லை;அலுவலகத்திலேயே டி.வி.வைத்துக் கொண்டு அதன் எதிரிலேயே கிடப்பார்.
அப்புறம் வீட்டிலும் இப்படி ராஜ ரகளை.

ஆனால்,என் ரசனை வேறுமாதிரி.

யார் ஜெயித்தார்கள் என்பதைத்தான் அடுத்த நாள் விலாவாரியாக செய்தித்தாள் சொல்லிவிடுமே, அப்புறம் எதற்கு விடிய விடிய விழிக்கனும்?

கல்லூரிக்காலத்தில் எனது சீனியர்கள் அத்தனை பேருக்கும் நான் பேசும்துணை. ஆனால் என் சீனியர்கள் என்னிடம் பேச விழையாத விஷயம் கிரிக்கெட் மட்டும்தான்.

“டேய், அவங்கிட்டப் போய் கபில்தேவ், கவாஸ்கர், ஸ்ரீகாந்த்ன்னு (இவர்கள் அரசாட்சி தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்) சொல்லிக்கிட்டு இருக்கே, அவன் அதுல புவர்...”
எனக்கு ரொம்ப வெட்கமாக இருக்கும் ஒரே இடம் இதான்.

கிரிக்கெட்டை நான் வெளியிலிருந்து ரசித்ததாலோ என்னமோ, அது தரும் வாழ்க்கை தத்துவத்தை மட்டும் எடுத்துக்கொண்டேன்.

ஆனால் தற்போது, எனது பயிற்சி வகுப்புகளில் அதை ஹை-லைட் பண்ணுவது என் வழக்கமாகிவிட்டது.

‘நம்ம வாழ்க்கையில் நாமதான் ஹீரோ. கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் தான் ஹீரோ. பேட்ஸ்மேனுக்கு ஆதரவாக ஒரேஒரு ரன்னர். ஆனால் அவரை சாய்க்க பதினொரு வில்லன்கள். இதான் வாழ்க்கை. வில்லன்களை மனிதர்கள் என எண்ணவேண்டாம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் என வைத்துக் கொள்வோம்.........’ இப்படிபோகும் எனது விளக்கவுரை.

எனது ஆதர்ச எழுத்தாளர் திரு மாலன் அவர்களின் ‘சொல்லாத சொல்’ 
படித்துக்கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக அதில் ஒருஇடத்தில் இதே கருத்தை எழுதியிருக்கிறார்.

அது வருமாறு :
1.       நாம் முன்னேறுவதை தடுக்க நம்மை சுற்றி எப்போதும் பத்துபேர் இருப்பார்கள், அதையும் தாண்டி நாம் ஜெயித்தாக வேண்டும்.

2.       எவ்வளவு நேர்ம் ஆடுகிறோம்? அது முக்கியமல்ல. என்ன சாதித்தோம் என்பதே முக்கியம்.

3.       வெற்றி,தோல்வி  நாம் தீர்மானிப்பதில்லை.களம்,காலம்,வானம் இவையும்தான்.

4.       எல்லோரும், எல்லா நேரங்களிலும் ஜெயிப்பதில்லை.

5.       எல்லை மீறாதீர்கள், அது எதிரிக்குத்தான் சாதகம். (சான்று- நோ பால்)

6.       நம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நாம் செய்யும் தவறுகள் தெரியாது. வெளியில் இருப்பவர்கள் சில சமயம் எடுக்கும் முடிவு நம்மை வழிப்படுத்தும் (சான்று – தேர்ட் அம்பயர்)

7.       நம் ஜோடியை நாம் தீர்மானிப்பது இல்லை.அது எங்கோ தீர்மானிக்கப்படுகிறது. என்றாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, அனுசரித்து ஆடுவது பிரச்சினையை குறைக்கும்.

இப்படிப்போகிறது அவரின் கருத்துகள். சரி இப்போது சொல்லுங்கள். கிரிக்கெட் வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிறதா இல்லையா?

யாரோ வெள்ளைக்காரனின் விளையாட்டு இது என நாம் சொல்லிக்கொண்டாலும், இந்த தேசம் சுதந்திரதினம், குடியரசுதினம் தவிர, ஒற்றுமையாக ஒரே நேரத்தில் தீவிர தேசபக்தி கொள்ள கிரிக்கெட்டும் காரணம் அல்லவா?