Tuesday, January 07, 2014

நூத்தியெட்டு

காலையில் பசங்களை பள்ளிக்கு பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு வீடு திரும்புகையில் வீட்டருகில் சின்னதாய் கூட்டம். நடுவே நண்பர் முகம் தெரிந்தது. கொஞ்சம் ‘திக்’ நெஞ்சோடு நின்று விசாரித்தேன். “என்ன சத்திய மூர்த்தி?” “பாருங்கண்ணா, இவனுக வேலையை?” “என்னாச்சி?” “ நாட்டிங் வண்டி, பின்னாடி பாக்காம ரிவர்ஸ் எடுத்திருக்கான். தறி ஓட்டற பொண்ணு குழந்தையோட நின்னிருக்கு, இடிச்சி தள்ளி, அந்த பொண்ணு கால் மேல டயர் ஏறிடுச்சி....” “ஐய்யயோ.......அப்புறம்...” – பதறித்தான் போயிற்று. “பொன்ணுக்கு கால் உடஞ்சு, கையில் இருந்த குழந்தை கீழே விழுந்து மண்டையில் பயங்கர அடி, வீங்கிடுச்சு....” “ஹாஸ்பிடல் போயிட்டாங்களா...?” “ இல்ல...பக்கத்துல முதலுதவி பண்ணிட்டு வீட்டுல இருக்காங்க...” ‘இருட்டைறையில் உள்ளதடா உலகம்’ என்று பாரதிதாசன் பாடியது நினைவில் வந்தது. “சரி, வாங்க பாக்கலாம்....” இருவரும் நடந்து ஒண்டு குடித்தனத்திற்கே உரிய லட்சணங்களில் பிசகாத இருட்டு வீட்டை அடைந்து, “ என்னம்மா, என்னாச்சி...?” மேலே சத்தியமூர்த்தி சொன்ன அத்தனையும் டிட்டோ.
“சரிம்மா, இங்க படுத்துட்டு என்ன பண்றே? ஸ்கேன் பண்ணி பாக்கலாம் அடி பலமா பட்டிருக்குது போல. கிளம்பு” “ அதெல்லாம் ஒண்ணுமில்லங்க, கால்ல கட்டு போட்டிருக்கு, சமாளிச்சுகுவேன்” “ உன்னை சொல்லல....குழந்தைக்கு ?” குழந்தை தலை குப்புற வலி மறக்கும் போஸில் படுத்திருந்தது. “.............................” “போலீசுல கம்ப்ளெயிண்ட் கொடுத்தாச்சா? எந்த வண்டி?” “ வண்டி கீலதாங்க நிக்குது. மாருதி ஆம்னி...” எட்டிப்பார்த்தேன். மாருதி ஆம்னி ஆதிகால தயாரிப்பில் ‘தேமே’ என நின்று கொண்டிருந்தது. “ டிரைவரை அடிச்சீங்களா..?” “ இல்லை....ஆனா இவனுக ரவுசு தாங்க முடியல. பவர்லூம் தறிக்கு பாவு முடிய வரன்னு இவனுக பண்ற சேட்டை ஓவர்..” உண்மைதான். நானே பார்த்திருக்கிறேன். காலவதியான வாகனம். பதிவு எண் சரியாக இருக்காது அல்லது தெரியாது. சாலையின் குறுக்கே அடைத்தமாதிரி நிறுத்தித்தான் ஒவ்வொரு முறையும் அவர்களின் வேலை நடக்கும். குறுகலான சாலையிலும் குறுக்கே நிற்கும். டிரைவரோ, கவலைப்படாமல் பீடி குடித்துக்கொண்டொ, பாக்கு போட்டுக்கொண்டோ துபாயிலிருந்து நேத்துதான் வந்த ஷேக்கு மாதிரி நின்றுகொண்டிருப்பான். “ உடனே 108 க்கு போன் போடு...” அந்த பெண் உடனே சத்தமிட்டாள், “அய்யோ அந்த வண்டியா. அது மட்டும் வேண்டாம்...” “ஏம்மா..?” “இல்லீங்க, நான் ஆட்டோ புடிச்சி போயிர்ரேன்...” “ஏன், 108 வேன் வேண்டாம்?” “இல்லை, அது வேண்டாம் “ எனக்கு புரியவில்லை. “ இங்க பாரு, ஆட்டோவில போனா, ஜி.ஹெச் சுல சுலபமா அட்மிட் ஆக முடியாது. அங்க சீட்டு வாங்கு, இங்க கையெழுத்து வாங்குன்னு அலைய விடுவாங்க். 108 வேன்ல பொனா நேரா அட்மிட் பண்ணிகிடுவாங்க்..” “சரிதான், ஆனா அது சவ வண்டியாசே? எப்பிடி அதுல போறதாம்?”. ‘இருட்டைறையில் உள்ளதடா உலகம்’ என்று பாரதிதாசன் பாடியது மறுபடியும் நினைவில் வந்தது. “ அண்ணா, போலாங்க, இதுகளை திருத்த முடியாது “ நானும் சத்தியும் வெளியே வந்துவிட்டோம்.