Wednesday, November 21, 2012

கண்ணுக்குக் கண்


அஜ்மல் கசாப்புக்கு (அப்பாடா) ஒரு வழியாக மரண தண்டனை கொடுத்தாகிவிட்டது. 

இது ஒன்றுமறியா அப்பாவி மக்கள் மீதும், இந்திய நாட்டின் சின்னமான தாஜ்விடுதி மீதும் நடத்திய தாக்குதலுக்கு தாமதமான தண்டனைதான், ஆனால் சரியான தண்டனையே!

காலையில் இது பற்றி புதியதலைமுறையில் செய்தி சொல்லிவிட்டு சில ரிடம் கருத்து கேட்டார்கள்

மார்க்.கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்னன் இது சரியே என்றார்

வேறு ஒரு சமூக ஆய்வாளர் இது தவறு என்றார்.

அதாவது பல நாடுகளில் கைவிடப்பட்ட  இந்த தண்டனை இந்தியா பிடிவாதமாக வைத்துக் கொண்டுள்ளது என்பது அவர் கருத்து. முஸ்லிம் நாடுகளில் தண்டனை எப்படி இருக்கிறது என்பது அந்த சமூக ஆய்வாளருக்கு எப்படி தெரியாமல் போயிற்று?

கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்கிற விதமான அவர்களின் தண்டனை முறையை ( நாற்சந்தியில் கல்லால் அடிப்பது, தலையை வெட்டுவது, கை விரல்களை வெட்டுவது, பிரம்பால் அடிப்பது,சவுக்கால் அடிப்பது....) நாம்கூட ‘இதுதான் தண்டனை, இப்படி செஞ்சாத்தான் மறுபடி தப்பு பண்ன மாட்டான்’ என ரசிப்பது எதற்காம்?

யூட்யூப் பக்கம் போங்க சமூக ஆய்வாளரே..... 

பாகிஸ்தான் செய்யும் எந்த ஒரு இந்தியக் கலவரத்துக்கும் இதே மாதிரி தண்டனையை உடனே ( இது கூட 2008-ல் நடந்து, 2010 –ல் நீதி விசாரணை முடிந்து, 2012-ல் தான் தண்டனை கொடுக்கிறோம். நமது நீதி துறை நிச்சயம் பாராட்டப் பட வேண்டியதே....) கொடுத்தால்தான் நம் மீது கொஞ்சமாவது பயம் இருக்கும், காஷ்மீர் பிரச்சினை கொஞ்சம் குறையும்.

Thursday, November 08, 2012

நல்லாத்தான போய்கிட்டு இருக்கு?


பேஸ்புக்கில் எப்படி ஹீரோவாக (அல்லது ஜீரோவாக) இருப்பது என்று இன்னும்பல பேருக்கு தெரிவதில்லை.

அதெப்படி பேஸ்புக் பத்தி தெரியாமல் பொழப்பு ஓடுதாம் ?

அழகு டிப்ஸ், ஆறுமடிப்பு (சிக்ஸ்பேக்ஸ்) டிப்ஸ், முதுகுவலி டிப்ஸ், மூட்டுவலி டிப்ஸ், அட அவ்வளவு ஏன், ஃபிகரை மடிக்கக் கூட டிப்ஸ் தரும்போது பேஸ்புக்கில் ஹீரோவாக டிப்ஸ் தரக்கூடாதா என்ன?

இதோ....சமய சஞ்சீவி.......!

காலை எழுந்ததும் :
“அன்பு பேஸ்புக் (இதை இப்போ முகனூல் என்று தமிழ்’படுத்தி’ இருக்கிறார்கள் நமது தமிழ் ஆஆஆவ்....ஆர்வலர்கள்) நண்பர்களுக்கு , இனிய காலை வணக்கம்” என்று போட்டு விட்டுத்தான் பாத்ரூமுக்குள் நீங்கள் நுழையவேண்டும். இல்லையேல் நீங்கள் ‘கசாப்’புக்கு கமிட்மெண்ட் கொடுத்தோர் வரிசையில் நிற்க வைக்கப்படுவீர்கள்.
நிம்மதியாக பாத்ரூம் போய் வந்தாச்சா? சரி. ஒரு காலைக் கடன் கழிந்தது. (நீங்கள் பாத்ரூம் போய்வந்ததை சொல்லவில்லை)

காப்பி, கீப்பி...? பழக்கமில்லையா? பரவாயில்லை.

இப்போது ‘நெட்’டை பாருங்கள். கை,கால்விரல்களில் நெட்டை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கண்ணை ‘நெட்’டை விட்டு எடுக்காதீர்கள். யாராவது பஹ்ரைனிலோ, சிங்கப்பூரிலோ, பதிவிட்டுக்கொண்டிருந்தால் ‘லைக்’ போடனுமில்ல?

(உள்ளூரில் எவனும் நம்மை லைக் பண்ணறவன் இல்லைன்னாலும், பேஸ்புக்கில் நம்மை ‘லைக்’ பண்ணித்தொலைக்க ஆளா இல்லை? விடுங்க பாஸ், இவிங்க எப்பவுமே இப்பிடித்தான்)

குளிக்கப்போகச் சொல்லி மனைவி கூப்பிடும்போது,இதோ வந்துட்டேன்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு போயிடக்கூடாது.அப்புறம் உங்க முகனூல் நண்பர்கள் உங்க பெயருக்கு நேரா பச்சைபுள்ளிய காணாம ஏங்கிப்போயிடுவாங்க பாருங்க?

அதனால, ‘எனதினிய முகனூல் நண்பர்களுக்கு (வாழ்க்கையிலமுதன்முறையாக) நான் குளிக்கப் போறேன்’ என்று-கடன் தொல்லையால் விஷம் குடித்து சாகப்போகிறவனெழுதுகிற மாதிரி- எழுதிவைத்துவிட்டு போகவும். அப்பாடா உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ‘என்னாச்சோ, ஏதாச்சோ’ என்கிற கவலை இல்லாமல் ப்ரீயாக தத்தமது வேலையைப் பார்ப்பார்கள்.

குளிச்சாச்சா?

சரி தொலையுது! இப்பிடித்தான் சில சமயம் நம்மை மீறின விஷயங்கள் (இதை ‘விடயம்’னு எழுதினா நீங்க சரியான தமிழ் ஆர்வலர்-கம்-பதிவர்) நடக்கும். எதையும் தாங்கும் இதையுமிருக்கனும்-இல்லைனா எப்பிடி பேஸ்ஃபுக்ல உறுப்பினரா இருக்க முடியும்?

ஆபிஸ் கிளம்பறீங்களா? 

வெளியே வேலை இருக்கா? மறக்காம நான் பள்ளிபாளையம் போறேன், பழைய பாளையம் போறேன்னு (எல்லாமே ரெண்டு கி,மீ.க்கு குறைவான தூரம்தான்... அல்லது அரைமணியில திரும்பற வேலைதான்,இருந்தாலும் வரலாறு முக்கியம்) ஸ்டேட்டஸ் போட்டுட்டுத்தான் கிளம்பனும். முடிஞ்சா நீங்க போற வண்டியை -அது கவர்ன்மெண்ட் வண்டியோ,கார்பரேஷன் வண்டியோ-ஒரு புகைப்படம் போட்டு அலிபி கிரியேட் பண்ணனும். கரெக்டா நடந்துக்கறறோமாம்.

“ஊருக்கு போய்க்கொண்டிருக்கிறேன்...மடிக்கணிணியில் பதிவிடுகிறேன்” .இப்படியே போகட்டும்.

மத்தியானம் நல்ல பசி. ஆனா இன்னும் லன்ச் டைம் ஆகலை, கொஞ்சம் கடுப்பாத்தான் இருக்கும். என்ன செய்யலாம்?

கொலைப்பசியை கொஞ்சம் கிரியேட்டிவா மாத்தலாம்.

எவன் மேலயோ இருக்கற கடுப்பை வேற எப்படி காட்டறதாம்?
‘இந்த சமுதாயமே செரியில்ல......மனுஷன் நடத்தையே சரியில்ல......சமீபத்தில் நான் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்த பொழுது’ன்னு ஆரம்பிச்சு, ஊர்,உலகத்திலுள்ள அத்தனை பேரையும் மானாவாரியா திட்டி ‘இப்படி இருப்பவனெல்லாம் ஒரு மனுஷனா,...’ன்னு கன்னாபின்னானு ஒரு பதிவை எழுதலாம். எழுதி?...வேறென்ன? ஷேர் பண்ண வேண்டியதுதான்.

உடனே இது ஊருல உள்ள அத்தனை அத்தனை நண்பர்களுக்கும் போகும். லைக்ஸ் பத்தலையா? Google+லயும் ஏத்த வேண்டியதுதான்.

எப்படா நம்மாளு பதிவான்...கமெண்ட் போடலாம்னு ஒரு (பொழுது போகாத) கூட்டம் காத்திகிட்டிருக்கும், அவங்களுக்கும் பொழுது போகனுமில்ல? லைக்ஸ்தான், ஷேர்ஸ்தான் !
திடீர்னு தேசநேசம் வரனும். அது சாயங்காலமா இருந்தாலும் பரவாயில்லை.
இந்திய நாடு என் வீடு....இந்தியன் என்பது என் பேரு(ரெஜிஸ்டெர்டு) என்று மெட்ராஸ்டாக்கீஸ் மணிரத்னம் மாதிரி அப்பப்ப (அப்பப்பா......) இந்திய பாசம் பொங்க எழுதனும். 

லைக்ஸ் எகிறிடும்.
தக்க மாதிரி சில புகைப்படங்கள் இருத்தல் நலம்.
வீட்ல பர்ஸ்ட் ஷோ போலாம்

னு சொல்லிட்டு வந்து, ஆபிசில மேனேஜர் பர்மிசன் தரலையா? கவலையை விடுங்க, இருக்கவே இருக்கு பேஸ்புக், எழுதிருவோம்.
ஆனா அதை நேரடியா எழுத முடியுமா?

கார்பரேட்,காம்ரேட் என்று எல்லா வார்த்தை பிரயோகங்களிலும் மேனேஜரை கண்ட மேனிக்கு திட்டி, அவரே படித்தாலும் புரியாத மாதிரி எழுதி, அப்டேட் பண்ண வேண்டியதுதான்.

உங்கள் ஆபிஸ் ரூம்,காரிடார், பியூன்,கார் நிற்கும் இடம் என்று எல்லா இடத்து போட்டோக்களையும் இடலாம். ஆனால் 

மேனேஜருக்கு (மட்டும்) தெரியாது. இந்த உலகத்தில் எப்படி எல்லாம் வேலையாட்கள் பளு ஏற்றப்படுகிறார்கள் என எழுதலாம்.கஞ்சம் கூட இரக்கமில்லாத உலகம் என திட்டலாம்.

Wednesday, November 07, 2012

‘அந்த’ மாதிரி படம் பார்ப்பவரா நீங்கள்?


அண்மையில் எனது நண்பர் ஒருவர் தனது மகன் பற்றி சொன்ன விஷயம், இரண்டு ஆண்பிள்ளைகளின் அப்பாவான எனக்கு(ம்) சற்றே அதிர்ச்சி தருவதாக அமைந்தது.

அதிர்ச்சிக்கு காரணம்- கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் அவரது மகனின் கைபேசியில் இருந்த அந்த ஒலி-ஒளி படங்கள்.

அதைப் பார்த்த அதிர்ச்சியில் அவர் மீள முடியாதவராய், எப்படி அதை மகனிடம் பேசுவது என்பதும் தெரியாதவராய் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

எனக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

19 ஆம் நூற்றாண்டின் தந்தையாய் இருந்திருக்க வேண்டியவர் இவர் என்றே தோன்றியது.

இன்னும் இவர் அவர்களின் வலையுலகை கவனித்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

 ஏனெனில் எளிதில் மற்றவர்கள் ஊடுருவ முடிகிற கைபேசியிலேயே ‘அந்த’ மாதிரி படத்தை வைத்திருக்கும் பையன், வலைத்தளத்தில் அம்மாதிரியான படங்களைத்தானே அதிகம் பார்ப்பான்?

அவனுக்கு ஈர்ப்பு எதில் அதிகமோ அதில்தான் கவனமும் இருக்கும்?

நிறையக் கல்லூரி மாணவர்களிடம் அடிக்கடி அளவளாவும் வாய்ப்பும், சேர்ந்து பயணிக்கிற வாய்ப்பும் அதிகம் உள்ளவன் என்பதால் இந்த விஷயத்தில் அவருக்கு உதவிட எண்ணினேன்.

அவனிடமே இதைப்பற்றிப் பேசலாமா என்றால் நண்பரோ தடுக்கிறார்.
“வேண்டாம்பா,அப்புறம் அதை அவன் வேற மாதிரி எடுத்துக்கப்போறான்” -எனக்கொரு சந்தேகம் –என் நண்பருக்கும் இந்தப் பழக்கம் இருக்குமோ? இது கூட ஒருவித ஒட்டுவாரொட்டிதான்.

அவனிடம் பேசாமல் எப்படி அவனுக்கு தீர்வு கொடுப்பதாம். ‘மலைபடுகடாம்’ படித்து பொருள் புரிந்துகொள்ளலாம். ஆனால் மாணவன்-அதுவும் மகன் ......புரிந்துகொள்வது கடினம்தான்.

கல்லூரிவிடுதியில் விடுமுறை தினங்களில் காணொளிகாட்டி கொண்டுவந்து திரைப்படம் பார்க்க நேர்ந்தபோதெல்லாம்,இடையிடையே விடுதிகாப்பாளர் இல்லாதபோது நாங்களும் ‘அந்த’ படங்களைப் பார்க்க ஆர்வம் காட்டியதும் நினைவுக்கு வருகிறது.

ஆனாலும் ‘அந்த’ படங்களுக்கு மயங்காதோர் ஆர்? அதிக கதாபாத்திரங்களே இல்லாத படம்-இன்னொரு கதாபாத்திரம் தேவையில்லாத படம். இருவரை ரசிக்கவே நமக்கு கவனம் போதாத போது வேறு பாத்திரங்கள் எதற்காம்?

இருவரைத்தவிர திரையில் மூன்றாம் நபர் வருவது மிகக் குறைவு.

பதின்வயதில்தான் இப்படி இந்த மாதிரி படங்களின் மீதான  ஈர்ப்பு அதிகம் ஏற்படுகிறதா என்றால், இல்லை, ஐம்பது,அறுபது தாண்டிய வயதிலும் ‘இதில்’ ஆர்வமாய் இருப்பவர் பலர்.

பேரன் எடுத்த வயதில் பேரன் பார்க்கும் படங்களை தாத்தா பார்ப்பதா? ஆச்சரியம்தான்!

ஆனாலும் இது சமூக உண்மை!

அண்மையில் ஒரு தமிழ் முன்னணி நடிகர் தனக்கும் ‘அந்த’ படங்களைப் பார்ப்பதிலிருக்கிற ஆர்வத்தை வெளிப்படையாக ஒத்துக்கொண்டதே ஒரு ஆச்சரியம்தான்.அதிலும் ஆச்சரியம் அதில்தான் தனக்கு ‘எனர்ஜி’ கிடைப்பதாகச் சொன்னது.( தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருக்கிறதா? என்ன செய்வது கலிகாலம்- எனர்ஜியான் சாப்பிட வேண்டியதுதானே?)

முன்பெல்லாம் வெளினாடுகளில்தான் இம்மாதிரியான படங்கள் எடுக்கப்பட்டன. அதற்கான வசதியும் அங்குதான் இருந்தது. ஆனால் மண்மணம்( இதில் என்னப்பா உள்ளூர்த்தனம்?) - நம்மவர்களுக்கு வேலை வாய்ப்பு(?) -வளர்ந்துவிட்ட தொழில்னுட்ப அறிவு ( அவ்வளவு தேவையா என்ன?) – ஆகியவை உள்நாட்டிலேயே இப்படங்களை தயாரிக்க உதவுகிறது.

தூர்தர்ஷனில் ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டு, கொஞ்ச நாள் நாக்கை சப்புகொட்டி இந்தியாவே பார்த்தது. என்னவோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் தூர்தர்ஷனில் நடு ராத்திரி 12 மணி வரை விழித்திருந்து பார்த்தாலும் ஒரு சின்ன காட்சிகூட வருவதில்லை.

மகனுடன் கடையில்போய் குறுந்தகடு, படவட்டு வாங்க நேர்ந்தபோது ‘அந்த’ படம் வேண்டும் எனக் கேட்டால், நம்மை ஒருவிதமாய் பார்த்துக் கொண்டே சிரித்தபடி பேப்பரில் மடித்து தருகிறார்கள்.

 “என்ன சார் ஒரே மாதிரி சீரியலாய் வாங்குறீங்க? நிறைய வெறைட்டி இருக்கு,இதுல” என இலவச சட்ட உதவி மாதிரி சட்டென கிட்டா உதவியும் கிட்டுகிறது.

 என்ன செய்வது? இது மனித மனங்களுக்குள் இருக்கிற குழந்தைத்தனம்.
அதை எத்தனைகாலம்தான் பெரியமனுஷத்தன் கொண்டு மறைப்பதாம்?

ஒரு உண்மையை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
கிட்டத்தட்ட நானும் அந்த பிரபல நடிகர் மாதிரிதான், டாம் அன்ட் ஜெர்ரி படம் என்றால் உயிர்-
என் பையனுக்கும்!