Thursday, December 26, 2013

மார்கழி - திருவிழாகளின் காலம்

வெளி நாடுகளில் குளிரடித்தால் சரக்கு அடித்துக்கொண்டு வீட்டை தாழிட்டுக்கொள்கிறார்கள்.

அது அவர்களின் பண்பாடு.


நம்ம ஊரில் ஊரே கூடி கோவிலில் கம்பமிட்டு, நெருப்பிட்டு ஒருவருக்கொருவர் இணக்கமாக இரவு ஆட்டம் ஆடி உடம்பை கதகதப்பாக வைத்துக்கொள்கிறோம்.

இது நம்ம பண்பாடு..       மார்கழி - திருவிழாக்களின் காலம்.


சுற்றி சுற்றி மார்கழி மாதத்தில் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்படுவதின் அர்த்தம் இதுதான்.

Wednesday, December 25, 2013

speech Craft -ம், பேச்சிழந்த நானும் !எத்தனையோ விருதுகள், பட்டங்கள் பெருகிறோம்.
ஆனால் அவற்றுள் திருப்தியளிப்பது எத்தனை?
நம்மால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் வித்தை கற்ற விதத்தை  நம்மிடம் பகிர்ந்துகொள்ளும்போது நம் இன்பம் அலாதியல்லவா?

அந்த பாராட்டு ஆஸ்கார், ஆடிகார் எல்லாவற்றிற்கும் மேல் அல்லவா?

கமலஹாசனே ஒரு நிலையில் ‘ஆஸ்கார் எல்லாம் வேலைக்கு ஆகாது. அங்கே கொஞ்சம் லாபி பண்ணனும். அது நமக்கு வராது. ஆனால் அதுகும் மேலே இருப்பது நம்மவர்களின் பாராட்டுதான்’ என மனம் பெயர்ந்துவிட்டாரே? .

அப்படி நான் பெற்ற  ஆஸ்கார்................

2013 , ஏப்ரல் 19-21 தேதிகளில் நடந்த இரண்டாம் கட்ட ‘பேச்சுப்பட்டறை’யான speech Craft –  ல் Co- Faculty  யாக கடமையாற்றிய அனுபவத்திற்கு கிடைத்த பரிசும், பாராட்டும் இதோ கீழே........

(படங்களை பெரிதாக்க அதன் மீது 'க்ளிக்' செய்யவும்)
Monday, December 09, 2013

பொறுப்பு !


சமூகப்பொறுப்பு என்பது பெரிய்ய்ய்ய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு உண்மையான இந்தியனுக்கும் இருக்கிறது.

நிரூபித்துள்ள 'ஹரி பாலா மால்' ஈரோடு.

நெஞ்சை நிமிர்த்தி வாழ்த்தலாம் !

Saturday, December 07, 2013

தாத்தா - பாட்டி - டைலர்அந்தக் கதை.....சுருக்கமாக !

ரெண்டு மூணு வருஷம் நோய்வாய்ப்பட்டு இருந்த பாட்டி திடீரென இறந்துவிட, தாத்தா மிகுந்த மனவருத்தத்துடன் பாட்டியின் அறையில் பெட்டிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.


அதில் ரெண்டு வருஷத்துக்கு முந்திய தேதியில் ஒரு டைலர் ரெசிப்ட் இருந்த்து. சட்டை தைக்க பாட்டி டைலரிடம் கொடுத்திருப்பார் போல.
அந்த டெலிவரி தேதி தாத்தாவின் பிறந்த தேதிக்கு அருகாமையில் இருந்த்தால் தாத்தாவுக்கு புரிந்துபோயிற்று. அது தனக்கான பிறந்த நாள் பரிசென்று.

கடை எண்ணுக்கு தொலைபேசினார்
” ஏப்பா. அந்த ரெசிப்ட் எண் 3325 ரெடியா”
மறுமுனையில் ” கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று சொன்னார்கள்.

நான்கு நிமிஷம் கழிய, “ நளைக்கு வந்து வாங்கிக்குங்க...பட்டனுக்கு போயிருக்கு “ என பதில் வந்தது.

Sunday, October 27, 2013

காலாழ் களரில்.......

மணிவண்ணனின் ‘அமைதிப்படை’யில் , தேர்தல் முடிவுகள் தொகுதிவாரியாய் அறிவிக்கும் இடத்தில் இப்படி ஒரு வசனம் இருக்கும்.

“நீங்க எங்க வேணா ஜெயிக்கலாம், அடுத்தது எங்க பகுதி அறிவிக்கப்போறாங்க, அங்க மாட்டிக்குவீங்க....”

மணிவண்ணன் இதற்கு தனது பாணியில் பதிலளிப்பார், “ போங்கடா, அங்கதாண்ட நாங்க கள்ள ஓட்டே போட்டோம்.....”  

தனதுபகுதியில் தன்னை யாராலும் வெல்லமுடியாது என்கிற தன்னம்பிக்கையும், ‘அவங்க’ ஏரியாவில் நாம் செய்யவேண்டிய வேலை என்ன என்பதையும் இந்த திரைப்படத்தில் வசனம்மூலமாக நமக்கு சின்ன எடுத்துக்காட்டு கிடைத்திருக்கிறது.

நமது தொழில் கூட அப்படித்தானே?

நமது உற்பத்திபொருள் யாரை குறிவத்து தயாரிக்கப்படுகிறது என்பதில் நாம் கவனம் செலுத்துகிறோமா?

இதை நவீனவியாபார யுக்தியில் segment selection என்கிறோம். வள்ளுவர் ‘இடனறிதல்’ என்கிறார்.

காலாழ் களரில் நரியடும் கண்ணாஞ்சா                                                
வேலாள் முகத்த களிறு         - குறள் எண் 500.

வடனாட்டுக் கதானாயகிகளின் பெயர்மாதிரி எல்லா ழகர- லகர- ளகர சமாச்சாரங்களையும் பயன்படுத்தியிருப்பதால் கொஞ்சம் ரகளையாய் இருக்கும் இந்தக் குறள், பொருள் புரிந்தால் எளியதுதான். காஜல் அகர்வாலும், சோனியா அகர்வாலும் சொந்தக்காரர்களா என்கிற அளவுக்கு புரிந்துபோனால் நான் பொறுப்பல்ல.

மிருகங்களில் பலமான யானையே கூட, தனது ஏரியா அல்லாத சதுப்பு நிலத்தில் சாதாரண நரியிடம் பயப்படும். அதாவது அவங்கவங்க ஏரியாவில் அவங்கவங்க கை உச்சம். ‘எங்க ஏரியா உள்ள வராதே’ என சொல்கிற தைரியம் பால்தாக்கரே மாதிரி யாருக்கு இருக்க முடியும்? தனது செக்மெண்ட்டை நன்றாக புரிந்துகொண்டவர்களுக்கு தானே?

திரைத்துறையின் எண்பதுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு பேர் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.


ஒருவர் டி.ராஜேந்தர், மற்றவர் கே.பாக்யராஜ்.

முன்னவர் ‘உயிருள்ளவரை உஷா’வில் ஆரம்பித்து (1982) தனது வித்தியாச நடை,உடை, சண்டை காட்சிகளில் கூட வசனம், சோகக்காட்சிகளிலும் அடுக்கு மொழிவசனம், அட்டகாசமான பாடல்-இசை.....என தனிக்காட்டுராஜாவாக வலம் வந்தார்.

ஏகப்பட்ட இளைஞர்கள் அவரைப்போலவே முகத்தில் ‘சவரமில்லா’ தாடி, ‘சன்சில்க்’ தலைமுடி என சிலுப்பிக்கொண்டு அலைந்தார்கள்.

காதலிக்கும் இளைஞர்கள் இவரின் குறி. அந்த ஏரியாவுக்கு ரசனை பட்டுவாடா, இவர்தம் பொறுப்பில். பெருசுகள், பெரிசாய் எதிர்பார்க்கும் விமர்சகர்களைப்பற்றி இவர் அலட்டிக்கொள்ளவே இல்லை.

பின்னவர் பெண்களின் ரசனையை ‘பேனாநுனி’யில் வைத்திருந்த பாக்யராஜ்.
பெண்களின் பிரச்சினைகள், கிராமத்துவழக்கங்கள், மத்தியரின் மனப்போராட்டங்கள் இவையே பாக்யராஜ் எடுத்தாண்ட ஏரியாக்கள். ரசிகர்கள்,விமரிசகர்களுக்கு தீனிபோட்ட சிக்கிமுக்கி சிக்கல்கள்-தீர்வுகள் இவரின் சிறப்பம்சம்.

அந்த ‘செக்மெண்ட்’ ஆளுகையில் இருக்க, அந்தந்த ஏரியாவினர் வயசாகிக்கொண்டே போனதை இவர்கள் உணராததால், புதியவர்கள் அந்த பகுதியை 90-களின் மத்தியபகுதியில் தாக்க, தாங்க முடியாமல் ‘விருப்ப ஓய்வு’க்குப் போனார்கள்.

எம்.ஜி.ஆரும், சிவாஜியும், ரஜினியும், கமலும் ஆத்திச்சூடி மாதிரி இதை ரொம்பவே புரிந்துகொண்டதால் அவர்களின் ஆயுள் அதிகம்.

மார்க்கெட்டின் ரசனை, அதன் தேவை, இதை எவ்வளவு புரிந்துகொள்கிறோமோ அந்த அளவுக்கு நமது வியாபாத்தில் வெற்றியை தக்க வைத்துக்கொள்லலாம்.


 
யமாஹா தடுமாற ஸ்ப்ளெண்டர் இன்னும் பறக்கிறது. 
சன்சில்க் இன்று இல்லை, கிளினிக்பிளஸ் சந்தையில் கலக்குகிறது.

பிபிஎல் காணாமல் போனவர்கள் லிஸ்டில்.  பின்னாளில் வந்த யாரையும்விட சன் டி.வி.இன்னும் கோலோச்சுகிறது.  ஆனால் ஏர்டெல் பட்டையை கிளப்புகிறது. ஆஹா பேஷ் பேஷ் நரசுஸ் காபியை கலங்கடித்துக்கொண்டிருக்கும் இன்ஸ்டன்ட் ப்ரூ.

ஆனாலும் ஒருவிஷயம்.

ஹெட் அண்ட் சோல்டர் சந்தையை கவனித்துக்கொண்டிருக்கிறது. விஜய் டி.வி.ஆர்வமாய் முன் வரிசையில். பைக்குகளின் மார்க்கெட்டை குறிவைத்து மீண்டும் ஸ்கூட்டர்கள் புது வடிவத்தில். சிங்கம் துணையுடன் ஏர்செல் களத்தில். அரிய சுவை உதயம்....புதிய சன்ரைஸ் என புதிய டி.வி. காலர்ட்யூன்.


சந்தையின் போக்கு, அது சரித்திரங்களை மாற்றும் போக்கு ! நாமும் அதில் கலந்து கலக்க நமது செக்மெண்டை முடிவு செய்ய வேண்டிய கலியகம்தாண்டிய ‘பெட்ரோல் யுகத்தில்’ இருக்கிறோம் என்பதை நெஞ்சில் கொள்க ! வெல்க !!

edissia - வுக்காக எழுதிய கட்டுரை!

Wednesday, October 02, 2013

பார்த்திபன் கனவும், பால்பாயிண்ட் பேனாவும்!

எனக்கொரு கனவு இருக்கிறது..என்றொரு உரையின் ஆரம்பம் நினைவுக்கு வரலாம், 

தப்பில்லை. 

ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அது ஒரே கனவாக த்தான் இருக்கிறதா என்பதே இக்கட்டுரையின் சாரம்.

அதாவது, எனது சின்ன வயசில் எனது கனவு, தமிழாசிரியர் ஆவது. ஆனால் எனது பத்தாம் வகுப்பில் வாராவாரம் நடக்கும் ‘நீதிபோதனை’ பிரிவேளையில் ‘இனிமேல் நீங்க, தொழில்கல்வி அதாவது ஐ.டி.ஐ. அல்லது பாலிடெக்னிக் படிச்சாத்தான் சம்பாதிக்க முடியும்’ என மறுபடி மறுபடி மருந்திடப்பட்டு மனசு மாறி ‘துகிலியல் தொழில் நுட்பம்’ படிக்கலானேன்.


அப்புறம், மட்டுமல்ல, இன்றைய வரைக்கும் அதுதான் எனக்கு சாப்பாடு போடுகிறது.

சரி, கனவு என்ன ஆச்சு?

அங்கேதான் இந்த பால்பாயிண்ட் மேட்டர் வருகிறது.

வாழ்க்கைப் பாதையின் ஒவ்வொரு வளைவும்,நெளிவும் நமக்கு பாடம் சொல்கிற மாதிரி, பால்பாயிண்ட் பேனாவும் ஒரு பாடம் சொல்கிறது. கற்றுக்கொள்ளலாம், தப்பில்லை,

எழுதுகிற ஆர்வம் வருகையில், பால்பாயிண்ட் பேனாவை எடுத்து ஒரு அழுத்தம் கொடுத்து, எழுதுமுனையை வெளியே வரவிட்டு பயன்படுத்துகிறோம். அப்படித்தான் நமது கனவும். வாய்ப்பு கிடைக்கையில் அந்த ஆர்வத்தை வெளியேவிட்டு விளையாடிப்பார்க்கலாம்.

வாய்ப்பு மறுக்கப்படுகையில்....மறுபடி ஒரு அழுத்து. நமது கனவும், பேனாவின் எழுது முனையும் உள்ளே. வெளியே பிரஷர் இருந்தால் என்ன செய்வதாம்?
இதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் செய்து பார்க்கலாம்,பார்க்கிறோம்.

நாம் ஏற்றுக்கொண்ட பாதையில் நமது பழைய கனவினை செயல்படுத்திப்பார்க்க வழியே இல்லை, என்ன செய்ய?

பணம்,குடும்பம்,பிரச்சினைகள், குழந்தைகள், அலுவலகம், ...இப்படி பாதையோ மாறிப்போச்சி. என் கனவினை என்ன செய்ய?

பழங்கனவாய்ப்போன என் லட்சியம்.....? இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சுமப்பது?மீண்டும் பேனாவைக் கவனியுங்கள்,


அது ஒத்துவராத ரீபிளை மாற்றிக்கொள்கிறது.

Saturday, September 28, 2013

ஆடி அடங்காத ஆட்டம் !

“வேல்ஸ்...வீட்டுக்கு வந்தாச்சா ?” இரவு ஒன்பது மணி, என் நண்பர் பரபரக்க தொலைபேசினார்.

“இன்னும் இல்லை, என்னா விஷயம் ?” அந்த தீவிரம் எனக்கும் தொற்றிக்கொண்டது.
“இன்னிக்கு மேட்ச் இருக்கு வரீங்களா?”

“என்ன பாஸ்,நான் என்னிக்கு நைட்ல கண்ணு முழிச்சு கிரிக்கெட் பார்த்திருக்கேன்?”

“அட...அதில்லை. நீங்க கிரிக்கெட் பாக்கற லச்சணம் எனக்கு தெரியாதா?, நடு நடுவே  நீங்க அடிக்கற கமெண்டுக்குத்தான் இங்க ஒரு ரசிகர் கூட்டமே இருக்கே, எங்க அப்பா உட்பட....”

“ ..........................”

“என்ன வரீங்களா, இல்லையா?”

“வரேன், வரேன்.....” என்று சொல்லிவிட்டு, மனசுக்குள் ‘வந்து தொலைக்கறேன்’ என்று சொல்லிக்கொண்டேன்.

தீவிர கிரிக்கெட் ரசிகரான என் நண்பர், லீவு போட்டுவிட்டு விளையாட்டை ரசிப்பது மட்டுமில்லை;அலுவலகத்திலேயே டி.வி.வைத்துக் கொண்டு அதன் எதிரிலேயே கிடப்பார்.
அப்புறம் வீட்டிலும் இப்படி ராஜ ரகளை.

ஆனால்,என் ரசனை வேறுமாதிரி.

யார் ஜெயித்தார்கள் என்பதைத்தான் அடுத்த நாள் விலாவாரியாக செய்தித்தாள் சொல்லிவிடுமே, அப்புறம் எதற்கு விடிய விடிய விழிக்கனும்?

கல்லூரிக்காலத்தில் எனது சீனியர்கள் அத்தனை பேருக்கும் நான் பேசும்துணை. ஆனால் என் சீனியர்கள் என்னிடம் பேச விழையாத விஷயம் கிரிக்கெட் மட்டும்தான்.

“டேய், அவங்கிட்டப் போய் கபில்தேவ், கவாஸ்கர், ஸ்ரீகாந்த்ன்னு (இவர்கள் அரசாட்சி தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்) சொல்லிக்கிட்டு இருக்கே, அவன் அதுல புவர்...”
எனக்கு ரொம்ப வெட்கமாக இருக்கும் ஒரே இடம் இதான்.

கிரிக்கெட்டை நான் வெளியிலிருந்து ரசித்ததாலோ என்னமோ, அது தரும் வாழ்க்கை தத்துவத்தை மட்டும் எடுத்துக்கொண்டேன்.

ஆனால் தற்போது, எனது பயிற்சி வகுப்புகளில் அதை ஹை-லைட் பண்ணுவது என் வழக்கமாகிவிட்டது.

‘நம்ம வாழ்க்கையில் நாமதான் ஹீரோ. கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் தான் ஹீரோ. பேட்ஸ்மேனுக்கு ஆதரவாக ஒரேஒரு ரன்னர். ஆனால் அவரை சாய்க்க பதினொரு வில்லன்கள். இதான் வாழ்க்கை. வில்லன்களை மனிதர்கள் என எண்ணவேண்டாம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் என வைத்துக் கொள்வோம்.........’ இப்படிபோகும் எனது விளக்கவுரை.

எனது ஆதர்ச எழுத்தாளர் திரு மாலன் அவர்களின் ‘சொல்லாத சொல்’ 
படித்துக்கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக அதில் ஒருஇடத்தில் இதே கருத்தை எழுதியிருக்கிறார்.

அது வருமாறு :
1.       நாம் முன்னேறுவதை தடுக்க நம்மை சுற்றி எப்போதும் பத்துபேர் இருப்பார்கள், அதையும் தாண்டி நாம் ஜெயித்தாக வேண்டும்.

2.       எவ்வளவு நேர்ம் ஆடுகிறோம்? அது முக்கியமல்ல. என்ன சாதித்தோம் என்பதே முக்கியம்.

3.       வெற்றி,தோல்வி  நாம் தீர்மானிப்பதில்லை.களம்,காலம்,வானம் இவையும்தான்.

4.       எல்லோரும், எல்லா நேரங்களிலும் ஜெயிப்பதில்லை.

5.       எல்லை மீறாதீர்கள், அது எதிரிக்குத்தான் சாதகம். (சான்று- நோ பால்)

6.       நம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நாம் செய்யும் தவறுகள் தெரியாது. வெளியில் இருப்பவர்கள் சில சமயம் எடுக்கும் முடிவு நம்மை வழிப்படுத்தும் (சான்று – தேர்ட் அம்பயர்)

7.       நம் ஜோடியை நாம் தீர்மானிப்பது இல்லை.அது எங்கோ தீர்மானிக்கப்படுகிறது. என்றாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, அனுசரித்து ஆடுவது பிரச்சினையை குறைக்கும்.

இப்படிப்போகிறது அவரின் கருத்துகள். சரி இப்போது சொல்லுங்கள். கிரிக்கெட் வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிறதா இல்லையா?

யாரோ வெள்ளைக்காரனின் விளையாட்டு இது என நாம் சொல்லிக்கொண்டாலும், இந்த தேசம் சுதந்திரதினம், குடியரசுதினம் தவிர, ஒற்றுமையாக ஒரே நேரத்தில் தீவிர தேசபக்தி கொள்ள கிரிக்கெட்டும் காரணம் அல்லவா?