Monday, July 29, 2013

புரளி இல்லாத பரளிக்காடு !

வருடா வருடம், ஒரு உற்சாகப் பயணம் – மிட்கான்,ஜோன்கான் தவிர - ஜே.சி.ஐ. அமைப்பில் இருக்கும். இந்த முறை பரளிக்காடு போகலாம் என முடிவானது.

காரமடை ரங்கனாதர் ஆலயம் தாண்டி இட்துதிருப்பம். போய்கிட்டே இருந்தால் வெள்ளியங்காடு வரும். ஒரு செக் போஸ்ட்.. ( முன்னரே பதிவு செய்ய வேண்டும் ) அனுமதியுடன் நுழைந்தால் அப்புறம் ஒரு மனித தலை ரோட்டில் கிடையாது. அவசர ஆத்திரத்துக்கு......(அதெல்லாம் இங்கேதுக்கு?... ஒரு பேச்சுத் துணைக்கு..) நீங்கள் மட்டும்தான்.

ஊட்டி குந்தா போகும் வழியில் ஒரு சரேல் திருப்பத்தில் இந்த அணை இருக்கிறது. இன்னும் ரொம்ப பிரபலமாகவில்லை போலும். கூட்டம், கட்டுப்பாட்டில்.

போன உடனே ஒரு ‘சுக்கு காபி’ வெல்கம் ட்ரிங்க் கொடுத்தார்கள்.
இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என யொசிப்பதற்கும் தீர்ந்துவிட்ட்து.


"பாட்டுத்தோழர் - சங்க செயலர் சதீஷ்"
எனது இல்லாள் - பாதுகாப்பாய் !

சரி, பரவாயில்லையென படகு சவாரி. பரவாயில்லை, ஊட்டி, கொடைக்கானலை விட அதிக தொலைவு அழைத்துப் போகிறார் படகோட்டி.

படகு பயணம் - எங்களின் இன்னொரு குழு !
சின்ன ட்ரெக்கிங் !

              

பரிசல் நண்பர்கள் !
"ஏங்க இங்க குதிச்சு நீச்சல் அடிக்கலாமா?’ என்றோம். : முதல்ல “ வெறும் கையை மட்டும் நனைச்சுப் பாருங்க என்றார்” . நனைத்தால் ‘ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்! வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்!’
.
பரிசலில் சப்தம் போட்டு பாடிக்கொண்டே வந்தோம். ஊருக்குள்லதான் நம்மலை ஒரு பய பாட விடறதில்லையே ?  சூப்பர் சிங்கர்ல கூட உள்ள நுழைய விடலையே ?  நம்ம குரல் அப்படி !

பாடி முடித்து.....சே....படகு சவாரி முடிந்து, திரும்பி வந்த்தும், வனதுறையினரே மதிய                                                       உணவு செய்து தருகிறார்கள்.
சாப்பாடு வரிசை....


“ ஏம்மா, எதுக்கு ரெண்டு தடவை ‘கொத்தமல்லி’ எழுதியிருக்கே?” என அதட்டி விசாரித்துக் கொண்டிருந்தார் அலுவலர்.
உணவு துறை !
அந்தம்மா அதட்டப்படாமல், “சாரே. அது கொழம்பு மல்லி, இது சட்னி மல்லி” என விளக்கம் கொடுத்தார்.

ஒரு இனிப்பு, ஒரு சப்பாத்தி, கொஞ்சம் பிரியாணி, ராகி களி உருண்டை, தயிர் சாதம் என கலக்கலான மதிய உணவு. அசைவ பிரியர்களுக்கும் தனி கவனிப்பு. எல்லாமே அன்-லிமிட்.

சாப்பிட்ட பின், தேன் மாதிரியான ஒரு ரஸ்தாளிப்பழம்- துக்குனியூண்டு சைசில்  செம ருசி. எவ்வளவு கேட்டாலும் தருகிறார்கள்.

தின்னது செரிக்கனுமே ,வேட்டை தடுப்பு பிரிவின் துணையுடன் ட்ரெக்கிங்!
யானை லத்தி, காட்டெருமை கால்தடங்கள்...என பய பக்தியுடன் நடந்தோம். “ ஏங்க, இங்க யானை பாக்க முடியுமா?” எனக் கேட்டேன். காவலர் சொன்னார், “ அதை பாக்கக் கூட்டாதுன்னுதான் நாங்க வரோம்”

அருவியோரம் நடைப்பயணம் - வைகோ வரவில்லை !
ஜில் குளியல்
அருமையான ஆத்தோர பயணம். 3 கி.மீ. நடந்த்தே தெரியவில்லை. ஒரு சின்னப் பாப்பா,  நடந்தே வந்த்து.
நடந்த களைப்பு தீர குளியல். ஐஸ் டிகிரியில் ஓடும் தண்ணீர். இன்னும் கொஞ்ச நேரத்தில் உறந்துவிடுவோமே என்கிற நிமிஷத்தில் மேலேறி உடை மாற்றினோம்.  

நல்ல சளியுடன்தான் அங்கே குளித்தேன். சளி போயே போச் !  

திரும்பி வரும் வரும் வழியில் சின்ன கிராமம்.
“ இந்த கோழி விக்கிறதா?” என வியாபார விசாரணைகள் போட்டுக் கொண்டே வந்தார்கள் எங்கள் நாட்டுகோழி ரசிகர் மன்ற கண்மணிகள்.9 மணிக்கேல்லாம் ஈரோடு வந்துவிட்டோம்.


மறுபடி பார்க்க ஆசைப்படும் இடங்களில் பரளிக்காடும் ஒன்றாகிவிட்ட்து.

தினசரி போன் கால் ( அங்கே வொடாபோன், ஏர்டெல், ஏர்செல் மட்டும்தான் ), டீசல் சுவாசம்,
சொந்த ஊரு வெயில் ..இதெல்லாம் மறந்து வரலாம் !


Tuesday, July 23, 2013

"என் இனிய இயந்திரா" - சீசன் 2

19.07.2013 வெள்ளி அன்று, குமாரபாளையம் போகும் வழியில் பள்ளிபாளையம் தாண்டி திடீரென்று என் ஸ்ப்ளென்டர் சைலன்சரில் புகை கக்க ஆரம்பித்து விட்டது.

‘கப்,கப்’ என்று டீசல் எஞ்சின் சப்தம் வேறு ! ஓரமாய் நிறுத்திவிட்டு, கவலையோடு வண்டியை பார்த்தேன். 2003 ஆம் ஆண்டில் வாங்கியது. பத்து வருஷம் ஆகிவிட்டது. இன்று 2013 !

இம்மாதிரி எல்லாம் என் வண்டி நடு ரோட்டில் காலை வாரியதாக சரித்திரமே கிடையாது.

‘ஆயுசு அவ்வளவுதானோ’ என்று கவலையுடன், நண்பருக்கு தொலைபேசி னேன். அவர் தனது காரில் வந்து என்னை அழைத்துப் போனார். எனது ஸ்ப்ளென்டரை அங்கேயே ஓரமாக ஒரு மளிகை கடையில் சொல்லி நிறுத்திவிட்டுப் போனேன்.

இரண்டு வருடங்களுக்கு முன் இது மாதிரி ஒருனாள் மாலைவேளையில் ‘கிக்கர்’ வேலை செய்யாமல் போக, சில ‘ஹீரோ’க்கள் வந்து சரி செய்து தர ஈரோடு வந்து சேர்ந்தேன்.

இன்று எப்படியோ?

எனது வேலை முடிந்ததும் அவரே, கொண்டு வந்து என் ஸ்ப்ளென்டர் அருகில் என்னை இறக்கி விட்டு, “எதாவது வேன் புடிச்சு எடுத்துகிட்டு வண்டியை போயிரலாமா?” என்றார்.

இதுவரை அப்படி தூக்கிப் போக வைக்காத என் செல்லம் இப்ப மட்டும் அப்படி செய்யுமா? ஈரோடு MSK customer care-க்கு சொல்லிவிட்டு சாவியை போட்டு உதைத்தேன். ஸ்டார்ட் ஆனது, கியர் போட்டு பார்த்தேன், நகர்ந்தது, நகர்த்தினேன், ஓடியது. மெதுவாகவே ( எதுக்கு வம்பு ?) நண்பரிடம் நன்றியை கொடுத்துவிட்டு நேராக MSK வந்து சேர்ந்தேன்.

“ ஒண்ணுமில்லை சார், சைலன்சரில் சின்ன ஆயில் அடைப்பு, கிளீன் பண்ணா சரியாயிடும், ஏப்பா, வொயிட் ஸ்மோக்குன்னு கம்ப்ளெயின்ட் எழுதி எடுத்துக்க” என்று விட்டு சர்வீஸ் எஞ்சினியர் போக என் வண்டி அடுத்தா நாள் புதுசாக ( இன்ன பிற எல்லா சர்வீசும் செய்து ) என்னிடம்.


“ரியல்லி ஸ்பெளெண்டர் இஸ் ஒண்டர்தான்” 

Thursday, July 18, 2013

அம்மா என்றழைக்காத....

உங்கள் அம்மா உங்களை அடிவயிற்றில் 9 மாதங்கள் சுமந்தார்.

சரி அது மட்டும்தானா?

நான்கு மாதங்கள் என்ன செய்கிறதென்றே தெரியாமல் வாந்தி, வலி, வயிற்றில் இனம் புரியாத ஒரு சுமையுடன்.......

நடக்கையில், உட்காருகையில்...தன் கால்கள் வியர்த்து வழிவதை உணர்ந்தார்.

தோல் இழுபடுவதை கண்டு பயப்படாமல் உங்களுக்காக காத்திருந்தார்
– கண்ணீருடன் !

மாடிப்படி , வீட்டு வாசற்படி ஏற பெரும் பிரயத்தனம்.....

மூச்சு விடவே சில சமயங்களில் கஷ்டம்.

சில பல தூக்கமில்லா இரவுகள் கண்ணீருடனும், சந்தோஷத்துடனும்.

நம்மை வெளிக்கொண்டு வர சொல்ல முடியாத வலியை பொறுத்துக்கொண்டார்.முடிந்ததா? அப்புறம்தான் பெரும்பாடே !  

உங்களின் முதல் நர்ஸ் அவர்தானே ?

உங்களின் உணவு தயாரிக்கும் சமையல்காரரும் அவர்தானே?

உங்களின் வேலைக்காரியாய் இருந்த்து யார்?

ஓரிடத்திலிருந்து வேறிடம் கூட்டிப்போகும் போக்குவரத்து அதிகாரியும் அவர்தானே? 

உங்களின் முதல் விசிறி யார் ?

சொல்லித்தந்த முதல் குரு யாராக இருக்க முடியும்?

கடைசி வரை நல்லதொரு நண்பனாக இருந்த்து யார்?

நமக்காக போராடிய தீவிரவாதி யார்?

நம்மை எண்ணி அழுத காதலி யார்?

நம் மீது நம்பிக்கை வைத்த மனைவி யார்?

நமக்காக கடவுளிடம் வரம் கேட்ட அவ்வை யார்?

நீங்கள் சொல்லும் எல்லாப் பொய்யையும் அப்படியே ஏற்ற்றுக் கொள்ளும் போலிஸ் யார்?


நாம் வளர்ந்த பிறகு, நமக்கெல்லாம் அவர் ஒரு பொருட்டே அல்ல. 

அனால் அவரின் 24 மணி நேரமும் நம்மை சுற்றியே இருந்த நாட்கள் உங்களுக்கு நினவில் இருக்கிறதா?

உங்களுக்கு அருகிலேயே அம்மா இருந்தால் நீங்கள் மிகவும் அதிருஷ்ட சாலி. ஒருபோது அவரை ஏசாதீர்கள்.............ஏனெனில் எப்படியும் ஒரு நாள் நாம் அவரை இழக்கத்தான் போகிறோம்.(உதவி : டாக்டர். சுப்பிரமண்யம் / ராஜமுந்திரி.)
Dr. Subrahmanyam Karuturi

Tuesday, July 02, 2013

கண்ணதாசன் காரைக்குடி............


அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுப் போகும் செய்தி என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, எதற்கு செய்தியெல்லாம் விட்டுப் போக வேண்டும்? ஒண்ணுமே சொல்லாமல் போனால் என்னாகும் என்றும் யோசிக்க வைக்கிறது...?

மகாத்மா காந்தி என்ன சொல்லி விட்டுப் போனார்?
எதுவும் சொல்லிவிட்டுப் போக வில்லை.

சொல்ல வேண்டியதை வாழ்ந்து காட்டி விட்டுப் போனார்.

அப்படி வாழ்ந்து காட்டிப் போனால், நம் அடுத்த தலைமுறை அதைப் பற்றி யோசிக்காதா என்ன?

................இப்படியெல்லாம் யோசனையோடு படுத்துக் கொண்டிருந்த போது தொலைக்காட்சியில்,
வாணாம் மச்சான் வாணாம் இந்த பொண்ணுங்க காதலு...
மூடி தொறக்கும் போதே தலை கவிழ்க்கும் குவாட்டரு...
என்கிற வரிகள் காதில் விழுந்தது.

சிந்தனை கலைந்து, சிதிலமாகிக் கொண்டிருக்கும் திசை நோக்கி என் கவனம் திரும்ப,
‘கண்ணதாசன் காரைக்குடி, பேரைச்சொல்லி ஊத்திக் குடி..
குன்னக்குடி மச்சானைப் போல் பாடப்போரெண்டா....’

என அடுத்த் நேயர் விருப்பம், அதிரடியாய் என் நெஞ்சைத் தாக்கியது.

இதைவிட கவனிக்க வேண்டிய கவலையான விஷயம் அடுத்த கட்டம்தான்.

மேற்படி பாடல்களின் அடுத்தடுத்த வரிகளை சர்வ சாதாரணமாக, ஏழுவயது பையன் பாடிக்கொண்டே போனதுதான்.

சமீபத்தில் ஒரு கல்லூரி முதல்வரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கவலையோடு பகிர்து கொண்டவிஷயமும் இது தொடர்பானதே - கல்லூரி மாணவர்களின் போதை பழக்கம்.

மிக எளிதாக இந்தப் பழக்கம் பிஞ்சுகளிடம் தொற்றிக் கொள்ளக் காரணம் அரசின் கொள்கை...இல்லை கொள்ளை!

 இலக்கு வைத்து சாராய வியாபாரம் செய்யும் அரசு, ஒரு வருடத்தில் முடிக்க வேண்டிய தோண்டிய சாலைகள் ( ஈரோடு சம்பத் நகரில், மாவட்ட ஆட்சியர் தினசரி செல்லும் சாலை எப்படி இருக்கிறது தெரியுமா?- இதை இலக்கு வைத்து திருத்தலாமே?) , கட்டண,கட்டணமில்லா கழிப்பிட வசதிகள், பள்ளிக்கு கட்டிடங்கள் மற்றும் நூல்கள்,.....இப்படி இலக்கு தேவையான பணிகள் நிறைய இருக்க, எதற்கு இதற்கோர் இலக்கு?

ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட நிறைய (கல்லூரி)மாணாக்கர்கள் ‘சரக்,சரக்’  என புத்தகங்களைப் புரட்டிய வேகம், அவர்களின் மூச்சுக் காற்றில் இருந்த ‘சரக்கு’ வேகத்தால்தானெனப் புரிந்தது.

‘ஈரோடு வாசிக்கிறது’ என நிரூபித்துக் காட்டிய மாணவ(வே)ர்கள் ஏன் இம்மாதிரி சிலவற்றை நேசிக்கிறார்கள்?

இந்த சாராய வியாபாரத்தில்தான் அரசு மின் ஆட்டுக்கல்லும், அரைவை இயந்திரமும், மிந்விசிறியும்,மாணவர்களுக்கு விலையிலா மடிக்கணிணியும் வழங்கமுடியும் என்றால், அதற்காய் இளைய தமிழகம் தரும் விலை என்ன தெரியுமா?தங்களின் வாழ்வாதாரமும், எதிர்காலமும்.

கண்ணை விற்று சித்திரம் வாங்கியதாய் முடியும் இந்த அரசு வியாபாரம்.

பள்ளிக்கு அருகில் மட்டுமல்ல........கல்விக்கு அருகில் கூட வரக் கூடாது இந்த போதை பொருள்களின் நடமாட்டம்.


இன்னுமொரு தலைமுறை காக்க, இதை செய்தால் என்ன நட்டம்?