Saturday, May 25, 2013

அப்பிச்சி - பார்ட் 2

ஈரோட்டில் இப்போது மாதிரியே, அப்போதும் ஜவுளி சந்தை வாராவாரம் நடக்கும். வசூலுக்கு, கணக்கு முடிக்க என்று சனிக்கிழமைகளில் வாரம் தவறாமல் ஈரோடு வருவார் அப்பிச்சி.

சனிக்கிழமைகளில் ‘கிழமை’ பிடிப்பது அம்மாவின் வழக்கம். மதியம் கொஞ்சம் சாம்பார்,ரசத்தோடு சாப்பாடு நடக்கும். சந்தைக்கு வந்துவிட்டு பொழுதிருந்தால் வீட்டுக்கு வருவார் அப்பிச்சி.

“ஈரோடு போயிட்டு புள்ளைய பாகாம வந்தீங்களாக்கும்?” எனும் அம்மாயினுடைய அவச்சொல்லுக்கு ஆளாகமல் தப்பிக்க ‘ஒரு எட்டு’ வந்துவிட்டுத்தான் போவார்.
“சனிக்கிழமை மத்தியானம் உங்கொம்மா வைக்கிற சாப்பாட்டுக்கு காக்கா வருதோ இல்லையோ, உங்கொப்பிச்சி கரெக்டா வந்துடரார்டா” என்பார் அப்பா, அம்மா முகம் சின்னதாவதைக் கண்டும் காணாமலும்.

அவருக்கு பெண் எடுத்த வீட்டை நக்கலடிப்பதில் எப்போதுமே அலாதி பிரியம்.
அப்பிச்சி வந்தால் எப்பவாவதுதான் சாப்பிடுவார். “பொண்ணு கொடுத்த வீட்டுல கை நலைக்கறதாவது?” என்று விட்டு ரொம்ப பிரஷர் கொடுத்தால்தான் கை நனைப்பார்.
சனிக்கிழமைகளை நாங்கள் ரொம்ப எதிர்பார்ப்பதுண்டு.

வீட்டுக்கு அப்பிச்சி வந்தால் , தன் ஜிப்பாவில் கைவிட்டு கைனிறைய சில்லறைக் காசுகளை எடுத்து, உங்களுக்கு எது வேணுமோ எடுத்துக்கொங்க...” என்பார், நாங்கள் எங்களுக்கு நன்கு பரிச்சயமா அந்த பத்து காசு நாணயம் ஒன்றோ இரண்டோ எடுத்துக் கொள்வோம். 

இதுதான் வழக்கமாக நடக்கும்.


மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்திருந்த அப்பா ஒருமுறை, “அட கிறுக்குப்ப்சங்களா, இதோ பாருங்க இதான் ஒரு ரூவா காசு, இது அம்பது காசு. (ரெண்டு ரூவா அப்ப வழக்கத்தில் இல்ல ) இது மாதிரி எதாவது உங்க அப்பிச்சி கையில இருந்தா ரெண்டு,மூனு எடுத்துக்கொங்க, அப்புறம் பாருங்க உங்கொப்பிச்சி மூஞ்சை..” என்று வெடி வைக்க, அடுத்த வாரம் அப்பிச்சிக்கு நொந்துபோன வா....ரம் ஆனது.

அவருக்கு நிறைய கலியாண குணங்கள் இருந்தாலும், எங்கள் மீது வைத்திருந்த வாஞ்சை குறிப்பிடத்தக்கது. என்ன இருந்தாலும் நீங்க , “தாத்தா உங்க தோட்டம் தெரியுதுன்னு தாண்டா சொல்வீங்க?” என்றும் குத்திக்காட்ட தவறமாட்டார்.

அந்த தாத்தாவின் சின்னவர் ( சின்ன அப்பிச்சி ) ஒருவரை எனக்கு ஞாபகம் இருக்கிறது. விஷேச நாட்களில் வீட்டுக்கு வருவார். சாப்பிட்டு விட்டு போய் விடுவார்.

 என்ன ஸ்பெஷல் என்றால் அவரது கை, மற்றும் உடம்பு அரிசி அரைக்கும் இயந்திரம் மாதிரி ஆடிக் கொண்டே இருக்கும்.

உடம்பெல்லாம் கொப்புளம்,கொப்புளமாய் இருக்கும். அவரை நெருங்கவே நாங்கள் தயங்குவோம். ஆனா கிணறு மாதிரியான நீர் நிலைகளில் பக்கெட் அவிழ்ந்து விழுந்தாலோ,  நீர் இறைக்கும் கப்பி கழன்றுவிழுந்தாலோ, ஏன் சின்ன மோதிரம் விழுந்தாலோ, இவரைத்தான் அழைப்பார்கள். அனாயசமாக மூழ்கி எடுத்துக் கொடுப்பார். இது பல முறை நடந்த அதிசயம். ஆனால் அதிலேயேதான் இறந்தார்.

எங்க அப்பிச்சியிடம் இருந்த ஒரே கெட்ட பழக்கம் என்றால் , அது பீடிதான். அது இல்லாமல் அவர் இல்லை. அதனால் நிறைய இருமினார். கடைசி சித்திக்கு மட்டும் கல்யாணம் பண்ணாத குறை ஒன்று அவருள் இருந்தது.

திடீரென்று உடல்நலக் குறைவு என்று தகவல் வர, திருப்பூர் வேலைக்கு கிளம்பியவன், விடுப்பு எடுத்துக் கொண்டு கவுந்தப்பாடி போனேன். 

அவசர சிகைச்சைக்கு டாக்டர் வந்துருந்தார். என்னப்பார்த்து கை தூக்கியவர் அப்படியே கண்னை மூடிவிட்டார்.

நான் என்னை மறந்து அழுதது அப்போதுதான்.

Thursday, May 23, 2013

மழை போலும் மோகம் !வெளிச்சக் கணவனை விட்டுப் பிரிந்த
இருட்டு மனைவியின்
மோகக் கதறல் !

அனிச்ச மலரினும்
மெல்லியலாள், அவளின்
மருட்டும் குரலின் சின்னச் சோகம்.

இடியும் மின்னலுமாய்
வீட்டின்
படியில் தெரியும்
வெளிச்சப் புகையினுள்
கொஞ்சம் தெரியும் அவளின்
கெஞ்சல் சிரிப்பு !


வானத்தை கிழித்த
மின்னல் கோடுகளால்
மனத்தை கிழிக்கும்
வெறித்த பார்வை.

தூரல் என்பதே
மழையின் தொடக்கம்தான்.
சாரல் வரவில்லை-
சாமி அதை தரவில்லை..

சிக்கல் சிக்கலாய்
சிந்தித்த இரவு
இறந்து போய் விடியல் வெளிச்சம்.

விடிந்தபின்னும்
மழை மட்டும் வரவே இல்லை.

Saturday, May 18, 2013

அப்பிச்சி !


பொதுவாக நம்மை பெத்தவங்களைப் பெத்த மூத்தோரை ‘தாத்தாபட்டி’ என்று குறிப்பிடுகிறோம். அடையாளம் தெரியாத வயாசாளிகளைத்தான் அப்படிச் சொல்லலாம்.
அம்மாவை பெற்ற தாத்தாவை ‘அப்பிச்சி’ என்று அழைப்பதுதான் எங்கள் (கொங்கு நாட்டு கைக்கோளர்கள்) வழமை. பாட்டியை ‘அம்மாயி’.

அப்பா தாத்தாவுக்கு ‘அப்பாரு’ என்று அழைப்பு மொழி.அவருக்கு ஜோடியாய் ‘ஆயா’.
அந்தக் காலம் என்ற மகுடேஷ்வரனின் கவிதை படித்த பின்னர் எனக்கு அந்தக் காலம் ஞாபகம் வந்துவிட்டது.

அப்பிச்சி ஒரு அலாதியான கேரக்டர்.

நல்ல வளர்த்தி. ஆறடிக்கு பக்கமாக இருக்கணும். நாந்தான் முதல் பேரப்பையன். எனது அம்மாதான் முதல் பெண் எங்க அப்பிச்சிக்கு.
அப்புறம் பெரிய மாமா.

பின்னர் இன்னொரு சித்தி. அதற்கு பிறகு சின்ன மாமா. அப்புறமாய் சொல்லி வைத்தார்போல நான்கு சித்திகள். மொத்தம் எட்டு உருப்படிகள். பிறந்ததும் இறந்து போனவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், எட்டுபேரில் இப்போது (2013 ) இரண்டாவது சித்தி இறந்து 10 வருடமும்,சின்ன மாமா இறந்து ஒரு வருடமும் ஆகி விட்டது.

முதல் மாமாவின் கல்யாணத்திலிருந்தே எனக்கு ஞாபகம் இருக்கிறது.

அப்பிச்சியை பற்றி நினைக்கும் போது, அவரது உயர்ந்த உருவம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. பலசாலியும் கூட. ஈரோட்டிலிருந்து தறிக்கு வேண்டிய நூல்கட்டுகளை தனியோருவராகவே எடுத்து பஸ் ஏற்றி, கவுந்தப்பாடி வந்து, பஸ் மாற்றியோ, தலைச்சுமையாகவோ மேட்டுப்பாளையம் (கவுந்தப்பாடியிலிருந்து பெருந்தலையூர் செல்லும் வ்ழியிலுள்ளது) கொண்டுவந்து ஆலமர (ஆலாமரம் என அழைப்பதும் வழக்கம்) நிறுத்தம்வரைக்கும் சேர்த்துவிட்டு தனியாக வீடு வந்து விடுவார்.
“போங்களா, போயி ஆலாமரத்துல நூல் கிடக்கு, எடுத்துட்டு வாங்க” என்று வீட்டில் உட்கார்ந்து விடுவார். 

உடனே அவருக்கு பழைய சோத்து தண்ணீரோ, கம்பு தண்ணீரோ ஒரு சொம்பில் கொடுக்கனும். இது அம்மாயி வேலை.

பாவுக்கும், ஊடைக்குமாய் சேர்த்து கலர் கலராய் நூல் கட்டுகள் அங்கே கிடக்கும். மாமாக்கள் அரசு உத்தியோகம் கிடைத்து சென்றுவிட்டதால் வீட்டில் இருப்பவர்கள் சித்திமார்கள்தான்.

ஆம்பிளைகள் மாதிரி அந்த நூல்கட்டுகளை சுமந்து வருவார்கள் சித்திகள். நல்ல உழைப்பாளிகள். ஆனாலும் வசீகரமான முக அமைப்பு அத்தனை பேருக்குமே.

வீடும்,பள்ளியும் எங்களுக்கு ஈரோட்டில்தான் என்றாலும், ஒவ்வொரு கோடைக்கும் தவறாமல் இரண்டு தாத்தா-பாட்டி வீடுகளுக்கும் ஆஜராகி விடுவோம்.

விஷேச நாட்களில் இட்லி தயாராகி விட்டால், சட்னியோ, குழம்போ கொதிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. ரெண்டு இட்லியை தட்டுகளில் போட்டு, கடலை எண்ணெய் ஒரு கரண்டி (ஸ்பூன் அல்ல, குழம்புக் கரண்டி) ஊற்றி , “தொட்டு சாப்பிடுங்க” என்பார். அந்தக் கடலை எண்ணெய் வாசமே சட்னி, சாம்பாரை தூக்கிச் சாப்பிடும். நாம் சாப்பிட மாட்டோமா என்ன?

“கொழந்த பசங்க, பசி தாங்க மாட்டாங்க...” என்பார்.
அவர் சாப்பிடுவதும் ஒரு காணத்தகுந்த காட்சியாகவே இருக்கும்.குளித்த பின்னர்தான் சாப்பிடுவார். குளிப்பதற்கு குளியலறையையெல்லாம் பயன்படுத்த மாட்டார். பெரிய வாசல். வாசலின் கடைசியில் தண்ணீர் தொட்டி. நீர் நிரம்பியிருக்கும் அதிலிருந்து மொண்டு நேரடியாக உடம்புக்கு ஊற்றிக்கொள்வார். கௌபீணம் (கோவணம்) தான் உடுத்தியிருப்பார் குளிக்கையில்.

உடம்பை நன்றாக தேய்த்து,தேய்த்து குளித்தபின்னர் கௌபீணத்தை உடுத்தியிருக்கும் வாக்கிலேயே ஒரு பிழி பிழிவார் பாருங்கள். இங்கே வலிக்கும். தலையை தன் விரல்களால் கோதுவார்.

அவ்வளவுதான் குளித்தாகிவிட்டது. புதிய கோவணமும், வேட்டியும் இடம் மாறும்.
அடுத்த காட்சி பூஜையறையில்.

நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமல், பழையது சாப்பிட்டது கிடையாது. சிவ பக்தர். மாசா மாசம் அமாவாசைகளில் திருச்செங்கோடு மலை ஏறி அர்த்தனாரீசுவரரை தரிசிக்காமல் இருந்ததில்லை.

ஆனாலும் உள்ளூர் பாட்டப்பசுவாமிகளிடம் பயம் அதிகம். என் அம்மா முதற்கொண்டு, சித்தி, மாமா வரை கல்யாணப் பொருத்தம் பார்க்கிற பொழுது, ஜாதகத்தை நம்பியதை விட, பாட்டய்யனிடம் வாக்கு கேட்டு, உத்தரவு ஆகிவிட்டால் காரியத்தில் இறங்கி விடுவார். யார் என்ன சொன்னாலும் காதில் போட்டுக் கொண்டதில்லை.

ஒருமுறை பள்ளிகோடை விடுப்பில் ஊருக்குப் போயிருந்தபோது, ‘பெருந்தலையூர் விஜயனில்’ ராபர்ட்-ராஜசேகரனின் ‘பாலைவனச் சோலை’ போட்டிருந்தார்கள். ஈரோட்டில் சக்கை போடுபோட்டதால், “அப்பிச்சி, படம் நல்லாருக்கும்.போலாமா?” என வினவ அவரும் தெரியாத்தனமாக படத்திற்கு வந்துவிட்டு ராத்திரி வீட்டில் வந்து அம்மாயி, மற்றும் சித்திகளிடம், “என்ன சினிமாப்படம் எடுக்கறனுங்க? பேசாம சும்மாவே உக்காந்திட்டு இருக்கானுக. ஒரு சண்டை இல்லை, ஆட்டம் பாட்டம் இல்லை........ஒரு பொம்பளை,அஞ்சி பசங்களாம்...படமாடா அது?”

சித்திகளுக்கோ சிரித்து மாளவில்லை

“இப்பிடித்தான்டா ஈரோட்டுல எல்லாம் கெட்டு அழியிறீங்க.....மூவேந்தர்ல ‘லவ-குசா’ போட்டிருக்கான். உங்களை மாதிரிதான் ரெண்டு பசங்க.போயி பாருங்க, மணி மணியா , அது பசங்க.......” உசுப்பேத்திவிட்டார்.

போய்ப்பார்த்துவிட்டு ராத்திரி....சாரி அதிகாலை ரெண்டரை மணிக்கு வீடு திரும்பினோம்.