காலாழ் களரில்.......

மணிவண்ணனின் ‘அமைதிப்படை’யில் , தேர்தல் முடிவுகள் தொகுதிவாரியாய் அறிவிக்கும் இடத்தில் இப்படி ஒரு வசனம் இருக்கும்.

“நீங்க எங்க வேணா ஜெயிக்கலாம், அடுத்தது எங்க பகுதி அறிவிக்கப்போறாங்க, அங்க மாட்டிக்குவீங்க....”

மணிவண்ணன் இதற்கு தனது பாணியில் பதிலளிப்பார், “ போங்கடா, அங்கதாண்ட நாங்க கள்ள ஓட்டே போட்டோம்.....”  

தனதுபகுதியில் தன்னை யாராலும் வெல்லமுடியாது என்கிற தன்னம்பிக்கையும், ‘அவங்க’ ஏரியாவில் நாம் செய்யவேண்டிய வேலை என்ன என்பதையும் இந்த திரைப்படத்தில் வசனம்மூலமாக நமக்கு சின்ன எடுத்துக்காட்டு கிடைத்திருக்கிறது.

நமது தொழில் கூட அப்படித்தானே?

நமது உற்பத்திபொருள் யாரை குறிவத்து தயாரிக்கப்படுகிறது என்பதில் நாம் கவனம் செலுத்துகிறோமா?

இதை நவீனவியாபார யுக்தியில் segment selection என்கிறோம். வள்ளுவர் ‘இடனறிதல்’ என்கிறார்.

காலாழ் களரில் நரியடும் கண்ணாஞ்சா                                                
வேலாள் முகத்த களிறு         - குறள் எண் 500.

வடனாட்டுக் கதானாயகிகளின் பெயர்மாதிரி எல்லா ழகர- லகர- ளகர சமாச்சாரங்களையும் பயன்படுத்தியிருப்பதால் கொஞ்சம் ரகளையாய் இருக்கும் இந்தக் குறள், பொருள் புரிந்தால் எளியதுதான். காஜல் அகர்வாலும், சோனியா அகர்வாலும் சொந்தக்காரர்களா என்கிற அளவுக்கு புரிந்துபோனால் நான் பொறுப்பல்ல.

மிருகங்களில் பலமான யானையே கூட, தனது ஏரியா அல்லாத சதுப்பு நிலத்தில் சாதாரண நரியிடம் பயப்படும். அதாவது அவங்கவங்க ஏரியாவில் அவங்கவங்க கை உச்சம். ‘எங்க ஏரியா உள்ள வராதே’ என சொல்கிற தைரியம் பால்தாக்கரே மாதிரி யாருக்கு இருக்க முடியும்? தனது செக்மெண்ட்டை நன்றாக புரிந்துகொண்டவர்களுக்கு தானே?

திரைத்துறையின் எண்பதுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு பேர் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.


ஒருவர் டி.ராஜேந்தர், மற்றவர் கே.பாக்யராஜ்.

முன்னவர் ‘உயிருள்ளவரை உஷா’வில் ஆரம்பித்து (1982) தனது வித்தியாச நடை,உடை, சண்டை காட்சிகளில் கூட வசனம், சோகக்காட்சிகளிலும் அடுக்கு மொழிவசனம், அட்டகாசமான பாடல்-இசை.....என தனிக்காட்டுராஜாவாக வலம் வந்தார்.

ஏகப்பட்ட இளைஞர்கள் அவரைப்போலவே முகத்தில் ‘சவரமில்லா’ தாடி, ‘சன்சில்க்’ தலைமுடி என சிலுப்பிக்கொண்டு அலைந்தார்கள்.

காதலிக்கும் இளைஞர்கள் இவரின் குறி. அந்த ஏரியாவுக்கு ரசனை பட்டுவாடா, இவர்தம் பொறுப்பில். பெருசுகள், பெரிசாய் எதிர்பார்க்கும் விமர்சகர்களைப்பற்றி இவர் அலட்டிக்கொள்ளவே இல்லை.

பின்னவர் பெண்களின் ரசனையை ‘பேனாநுனி’யில் வைத்திருந்த பாக்யராஜ்.
பெண்களின் பிரச்சினைகள், கிராமத்துவழக்கங்கள், மத்தியரின் மனப்போராட்டங்கள் இவையே பாக்யராஜ் எடுத்தாண்ட ஏரியாக்கள். ரசிகர்கள்,விமரிசகர்களுக்கு தீனிபோட்ட சிக்கிமுக்கி சிக்கல்கள்-தீர்வுகள் இவரின் சிறப்பம்சம்.

அந்த ‘செக்மெண்ட்’ ஆளுகையில் இருக்க, அந்தந்த ஏரியாவினர் வயசாகிக்கொண்டே போனதை இவர்கள் உணராததால், புதியவர்கள் அந்த பகுதியை 90-களின் மத்தியபகுதியில் தாக்க, தாங்க முடியாமல் ‘விருப்ப ஓய்வு’க்குப் போனார்கள்.

எம்.ஜி.ஆரும், சிவாஜியும், ரஜினியும், கமலும் ஆத்திச்சூடி மாதிரி இதை ரொம்பவே புரிந்துகொண்டதால் அவர்களின் ஆயுள் அதிகம்.

மார்க்கெட்டின் ரசனை, அதன் தேவை, இதை எவ்வளவு புரிந்துகொள்கிறோமோ அந்த அளவுக்கு நமது வியாபாத்தில் வெற்றியை தக்க வைத்துக்கொள்லலாம்.


 
யமாஹா தடுமாற ஸ்ப்ளெண்டர் இன்னும் பறக்கிறது. 
சன்சில்க் இன்று இல்லை, கிளினிக்பிளஸ் சந்தையில் கலக்குகிறது.

பிபிஎல் காணாமல் போனவர்கள் லிஸ்டில்.  பின்னாளில் வந்த யாரையும்விட சன் டி.வி.இன்னும் கோலோச்சுகிறது.  ஆனால் ஏர்டெல் பட்டையை கிளப்புகிறது. ஆஹா பேஷ் பேஷ் நரசுஸ் காபியை கலங்கடித்துக்கொண்டிருக்கும் இன்ஸ்டன்ட் ப்ரூ.

ஆனாலும் ஒருவிஷயம்.

ஹெட் அண்ட் சோல்டர் சந்தையை கவனித்துக்கொண்டிருக்கிறது. விஜய் டி.வி.ஆர்வமாய் முன் வரிசையில். பைக்குகளின் மார்க்கெட்டை குறிவைத்து மீண்டும் ஸ்கூட்டர்கள் புது வடிவத்தில். சிங்கம் துணையுடன் ஏர்செல் களத்தில். அரிய சுவை உதயம்....புதிய சன்ரைஸ் என புதிய டி.வி. காலர்ட்யூன்.


சந்தையின் போக்கு, அது சரித்திரங்களை மாற்றும் போக்கு ! நாமும் அதில் கலந்து கலக்க நமது செக்மெண்டை முடிவு செய்ய வேண்டிய கலியகம்தாண்டிய ‘பெட்ரோல் யுகத்தில்’ இருக்கிறோம் என்பதை நெஞ்சில் கொள்க ! வெல்க !!

edissia - வுக்காக எழுதிய கட்டுரை!

Comments

Popular Posts