சிக்கு புக்கு, சிக்கு புக்கு ரயிலே...!


ரயில் பயணம் என்பது நிஜமாலும் ஒரு ஜாலியான பயணம்தான். அது எனக்கு வாய்த்தது 90 களில்.

திருப்பூரில் ரெண்டு வருடம் வேலை பார்த்தபின்பு, குடும்பத்தில் அடித்த ஒரு சுனாமி என்னை தினசரி ஈரோடு டூ திருப்பூர்  நாடா ட்ரிப் அடிக்க வைத்தது.

அம்மாவை தனியாக வார, மாதக்கணக்கில் விடமுடியாது என்பதால் அதிரடியாக அப்படி ஒரு முடிவினை எடுக்க வேண்டியாகிவிட்டது.

காலை 6.10 கோயம்புத்தூர் பாசஞ்சருக்கு வீட்டிலிருந்து 5.45 க்கே கிளம்பனும் – மதியத்துக்கான சாப்பாட்டுடன்.

அம்மா அசராமல் செய்து கொடுத்துவிட்டாலும், சைக்கிளை மிதித்து, மிதித்து ரெயில்வே ஸ்டேசன் போய்ச்சேர டைம் ஆகிவிடும்.

ட்ரெயினில்தான் ரணகளமே !

ஆறுமணிக்கே வந்துவிடும் சில நண்பர்கள் (ரெயில்வே காலனியிலேயே வீடு) அதிகாலையிலேயே சீட்டுகட்டு போட ஆரம்பித்து விடுவார்கள்.

இங்கே மாங்கு மாங்குன்னு வியர்த்து விறுவிறுக்க ரயில் ஏறும்போது நாக்கு தள்ளும். 

அப்போ பார்த்துதான் மாதாந்திர ரெனிவல் செய்யாதது ஞாபகம் வந்து தொலைக்கும். 

இளங்கோ அல்லது சங்கர் எப்படியும் சீட் போட்டுவைத்திருப்பார்கள் எனும் நம்பிக்கையில் தாமதமாக வரலாம். நம்ம சீட் காலியாக இருக்கும்.

சமயத்தில் கடைசி பெட்டி தெரியும். அடுத்த எக்ஸ்பிரஸுக்கு காத்திருக்க வேண்டியதுதான் அதற்கு ஒரு மணி நேரம் ஆகும். என்ன, எல்லோரையும் ஒரு நாள் பிரிந்து பயணம்...கஷ்டம்தான்.

தொட்டிபாளையம் தாண்டியதும் டிபன் பாக்ஸ் எல்லாம் திறக்கப்படும். எப்படியும் ரெண்டு பேராவது டிபன் பாக்ஸ் இல்லாமல்தான் வருவார்கள்.

 “ நீ என்னடா கொண்டு வந்திருக்கே?”                                                 
“ பூரிதான் பண்ணா, அதாத்தான் இருக்கும்” என்ற படியே திறந்தால் 10 பூரிகளாவது அதில் இருக்கும்.                                                                             
“ எதுக்குடா இவ்வளவு?”  “ உங்களுக்காகத்தான்டா, நிச்சயம் யாராவது கொண்டுவந்திருக்க மாட்டீங்கன்னு அவதான் கொடுத்தனுப்பிச்சா”  இப்படி சில சீரியஸ் மனைவிகள் எங்களின் நண்பர்களுக்கு !

யார் டிபன் கொண்டுவரவில்லையோ அவ்ர்களுக்கென்றே “காபி....காபி..” என்றபடி அடுத்த சோதனை வரும்

“ டேய், நீதான் என் டிபனை தின்னியே, காபி வாங்கேண்டா...”

“வாங்கி தொலைக்கறன்டா” என்ற படியே காபி வாங்குவான் பதினான்கு பேருக்கும்.  14 x 5 எழுபது ரூபாய் பழுக்கும்.

முறைவாசல் மாதிரிதான் இந்த காபி ஆஃபரும். தினம் ஆப்ஷன் ஒருவருக்கு மாறி மாறி வரும்.

சாயங்காலங்களில் ஏழு மணி பாசஞ்சருக்கு ஒரு கூட்டம், எட்டேகால் டெல்லி எக்ஸ்பிரசுக்கு ஒரு கூட்டம், ஒன்பது மணி பிருந்தாவனுக்கு ஒரு கூட்டம் என பிரிந்து விடுவதால் அவ்வளவாக நைட் வண்டிகள் களை கட்டாது.
இருந்தாலும் அடுத்த நாள் காலையில் இரவின் கதைகள் சுவாரசியத்துக்கு இரவல்காதுகள் தயாராய் இருக்கும்.

பல சுவாரசியக்கதைகள் இரவு ட்ரிப்பில்தான் இருக்கும்.

டி.டி.ஆர் கேட்ட டிக்கெட்டை எடுத்துக்கொடுக்காமல் தூங்குகிற பாவனையில் விழித்திருந்த கேரளப்பயணியை சீசன்டிக்கட் மக்கள் நக்கலாய் பார்க்க, அது கிளப்பிய கோபத்தில் அந்த கேரளப்பயணி எழுந்து, “இங்க எந்தா நோக்குது..பட்டீ....” என திட்ட அடுத்த 30 நிமிடங்கள் விஜயகாந்தாய் மாறிய எங்கள் குழாம் அந்த கே.பயணியை பின்னிப்பெடலெடுத்த (காலால் மிதிப்பதுதானே பெடல்?)கதை...இன்னும் நாங்கள் சொல்லிச் சொல்லி சிரிக்கிற கதை.

எப்போதும் கேரளப்பயணிகள்தான் ரகளையின் நாயகர்கள்.
இடப்பற்றாக்குறையினால் ‘அட்ஜஸ்ட்’ பண்ணி உட்காரமுடியாத ஒரு கேரளியன் ‘கத்தி’யைக்காட்டி சீசன்டிக்கட் மக்களை மிரட்ட, கத்தியை பிடுங்கி, வேட்டியை அவிழ்த்து, அதாலேயே கையை கட்டி, பிளாட்பாரத்தில் தப்பி ஓடியவனைப்பிடித்து, ஈரோடு ரயில்வே போலீசிடம் ஒப்படைத்த கதை.

பாசஞ்சர் ரயிலின் நேரத்தை மாற்றக்கோரி நடந்த போராட்டங்களில் ‘அபாயசங்கிலி’ இழுக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டு, ஊத்துக்குளி ஸ்டேசனில் காவல் வைக்கப்பட்டதால், கடுப்பான எம்மக்கள் ஒரு தந்திரம் செய்தனர். போலீசாரால் அனுமானிக்கமுடியாத, எளிதில் அனுக முடியாத ஒரு ரிமோட் ஏரியாவில் திட்டமிட்டு ரயிலை நிறுத்தி, 30 நிமிடங்கள் காவல்துறையினர் தண்டாவாளத்தில் நடந்து வந்து “யாருய்யா அது சங்கிலியை இழுத்தது ?”என விசாரிக்க, ஷண்டிங்கில் ஸ்லோவாய் பாசான எக்ஸ்பிரசில் போரட்டக்குழுவினர் பாசான சங்கதி......


எத்தனை மனிதர்கள்....எத்தனை அனுபவங்கள்?

Comments

Popular Posts