அப்பிச்சி - பார்ட் 2

ஈரோட்டில் இப்போது மாதிரியே, அப்போதும் ஜவுளி சந்தை வாராவாரம் நடக்கும். வசூலுக்கு, கணக்கு முடிக்க என்று சனிக்கிழமைகளில் வாரம் தவறாமல் ஈரோடு வருவார் அப்பிச்சி.

சனிக்கிழமைகளில் ‘கிழமை’ பிடிப்பது அம்மாவின் வழக்கம். மதியம் கொஞ்சம் சாம்பார்,ரசத்தோடு சாப்பாடு நடக்கும். சந்தைக்கு வந்துவிட்டு பொழுதிருந்தால் வீட்டுக்கு வருவார் அப்பிச்சி.

“ஈரோடு போயிட்டு புள்ளைய பாகாம வந்தீங்களாக்கும்?” எனும் அம்மாயினுடைய அவச்சொல்லுக்கு ஆளாகமல் தப்பிக்க ‘ஒரு எட்டு’ வந்துவிட்டுத்தான் போவார்.
“சனிக்கிழமை மத்தியானம் உங்கொம்மா வைக்கிற சாப்பாட்டுக்கு காக்கா வருதோ இல்லையோ, உங்கொப்பிச்சி கரெக்டா வந்துடரார்டா” என்பார் அப்பா, அம்மா முகம் சின்னதாவதைக் கண்டும் காணாமலும்.

அவருக்கு பெண் எடுத்த வீட்டை நக்கலடிப்பதில் எப்போதுமே அலாதி பிரியம்.
அப்பிச்சி வந்தால் எப்பவாவதுதான் சாப்பிடுவார். “பொண்ணு கொடுத்த வீட்டுல கை நலைக்கறதாவது?” என்று விட்டு ரொம்ப பிரஷர் கொடுத்தால்தான் கை நனைப்பார்.
சனிக்கிழமைகளை நாங்கள் ரொம்ப எதிர்பார்ப்பதுண்டு.

வீட்டுக்கு அப்பிச்சி வந்தால் , தன் ஜிப்பாவில் கைவிட்டு கைனிறைய சில்லறைக் காசுகளை எடுத்து, உங்களுக்கு எது வேணுமோ எடுத்துக்கொங்க...” என்பார், நாங்கள் எங்களுக்கு நன்கு பரிச்சயமா அந்த பத்து காசு நாணயம் ஒன்றோ இரண்டோ எடுத்துக் கொள்வோம். 

இதுதான் வழக்கமாக நடக்கும்.


மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்திருந்த அப்பா ஒருமுறை, “அட கிறுக்குப்ப்சங்களா, இதோ பாருங்க இதான் ஒரு ரூவா காசு, இது அம்பது காசு. (ரெண்டு ரூவா அப்ப வழக்கத்தில் இல்ல ) இது மாதிரி எதாவது உங்க அப்பிச்சி கையில இருந்தா ரெண்டு,மூனு எடுத்துக்கொங்க, அப்புறம் பாருங்க உங்கொப்பிச்சி மூஞ்சை..” என்று வெடி வைக்க, அடுத்த வாரம் அப்பிச்சிக்கு நொந்துபோன வா....ரம் ஆனது.

அவருக்கு நிறைய கலியாண குணங்கள் இருந்தாலும், எங்கள் மீது வைத்திருந்த வாஞ்சை குறிப்பிடத்தக்கது. என்ன இருந்தாலும் நீங்க , “தாத்தா உங்க தோட்டம் தெரியுதுன்னு தாண்டா சொல்வீங்க?” என்றும் குத்திக்காட்ட தவறமாட்டார்.

அந்த தாத்தாவின் சின்னவர் ( சின்ன அப்பிச்சி ) ஒருவரை எனக்கு ஞாபகம் இருக்கிறது. விஷேச நாட்களில் வீட்டுக்கு வருவார். சாப்பிட்டு விட்டு போய் விடுவார்.

 என்ன ஸ்பெஷல் என்றால் அவரது கை, மற்றும் உடம்பு அரிசி அரைக்கும் இயந்திரம் மாதிரி ஆடிக் கொண்டே இருக்கும்.

உடம்பெல்லாம் கொப்புளம்,கொப்புளமாய் இருக்கும். அவரை நெருங்கவே நாங்கள் தயங்குவோம். ஆனா கிணறு மாதிரியான நீர் நிலைகளில் பக்கெட் அவிழ்ந்து விழுந்தாலோ,  நீர் இறைக்கும் கப்பி கழன்றுவிழுந்தாலோ, ஏன் சின்ன மோதிரம் விழுந்தாலோ, இவரைத்தான் அழைப்பார்கள். அனாயசமாக மூழ்கி எடுத்துக் கொடுப்பார். இது பல முறை நடந்த அதிசயம். ஆனால் அதிலேயேதான் இறந்தார்.

எங்க அப்பிச்சியிடம் இருந்த ஒரே கெட்ட பழக்கம் என்றால் , அது பீடிதான். அது இல்லாமல் அவர் இல்லை. அதனால் நிறைய இருமினார். கடைசி சித்திக்கு மட்டும் கல்யாணம் பண்ணாத குறை ஒன்று அவருள் இருந்தது.

திடீரென்று உடல்நலக் குறைவு என்று தகவல் வர, திருப்பூர் வேலைக்கு கிளம்பியவன், விடுப்பு எடுத்துக் கொண்டு கவுந்தப்பாடி போனேன். 

அவசர சிகைச்சைக்கு டாக்டர் வந்துருந்தார். என்னப்பார்த்து கை தூக்கியவர் அப்படியே கண்னை மூடிவிட்டார்.

நான் என்னை மறந்து அழுதது அப்போதுதான்.

Comments

Popular Posts