ஆன்லைன் அடைக்கலம்.





“நிச்சயம் இன்னொரு பிளேசர் வேணும் ப்ரோ…” என்றார் சக பயிற்சியாளர் .
அடுத்தடுத்த வாரங்களில் சில பிசினஸ் பயிற்சி வகுப்புகள் எடுக்க வேண்டியிருந்தது. 

என்னிடம் இருந்ததோ ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு.

“நேவி ப்ளூ வச்சிருக்கீங்க இல்லையா?……ஆப்படின்னா கருப்போ…அல்லது டார்க் கிரேவோ ,  ஒண்ணு வாங்கிடுங்க….! சுளுவா ஆன் லைன்ல ஆர்டர் பன்ணுங்க” என்று ஐடியா வேறு கொடுத்தார் சக.

சுருக்கமாய் வேலையை முடிக்கலாம் என்று யோசித்ததுமே, ஆன்லைனில் தீபாவளி சட்டை வாங்கின அனுபவம் செல்லூர்ராஜு வின்  நதிமூடல் ஞாபகமாய் வந்தது.

நெட்டில் அப்படி பிரவுசிய போது ‘மூன்று சட்டைகள் ரெண்டாயிரம் ரூபாய்’ என ஆப்பர்  ஒன்று கண்ணில் பட்டது. இம்மாதிரியான சமயங்களில் அக்கவுண்டில் பணம் வரவேண்டி(?) இருக்கும். (அதாவது கம்மியாகத்தான் இருக்கும்) விளம்பரத்தை பார்த்துவிட்டு, ஜொள் விட்டு, அப்படியே கடந்து போய் விடும் வாய்ப்புகள் அதிகம்.

விதி வலியது. 
அக்கவுண்டிலும் பணம் இருந்தது.
ஆசை வலியது. 
அக்கவுண்டிலும் பணம் குறைந்தது.

ஒரு வாரம் கழித்து ஒரு பார்சல் வந்தது. அட்ரசே இல்லாத, முட்டு சந்து கொரியர் தம்பி ஒருவர் பாதி கிழிந்த பார்சலை கொடுத்தார்.  அந்த பாதிக்கிழிசலை வரவழைக்க டெலிவரி ஸ்டேட்டஸ் பாலோ-அப், பத்து போன்,  நானே கூகுள்மேப்பாய் மாறின கதை…இன்ன பிற இன்னல்களை சொல்லப்போனால் நானும் பாதிக்கிழிசலாவேன். ஆக நிற்க !
அந்த கார்மெண்ட் மேன்யூபேக்சரர் குமுதம் பத்திரிக்கையில்  சில காலம் வேலை பார்த்திருக்க வேண்டும். மூன்று சட்டைக்கு ஒரு சட்டை இலவச இணைப்பாய் அனுப்பியிருந்தார்.   அந்த இணைப்புக்கு, நெஞ்சாற நன்றி சொல்லத்தான் வேண்டும், ஏனெனில் அந்த ஒன்று மட்டும்தான் என் சைசுக்கு நெருக்கமாயிருந்தது.

 நான் என்ன விக்கிமாதித்த வேதாளமா, அல்லது எச்.ராஜாவா, செய்த தப்பையே திருப்பி செய்ய?  ஆக ஆன்லைனில் பிளேசர் வாங்கி, என் சிலுவையை நானே தயார் செய்ய தயாராய் இல்லை.

பிளேசருக்காக இந்த முறை ‘தி சென்னை சில்க்’ஸின் கிளை ஒன்றிற்கு சென்றிருந்தேன்.  இங்கே ஒன்றை சொல்லியே தீர வேண்டும். இதுவரை எனக்கு பிளேசர் வாங்கிய அனுபவம் இல்லை. முந்தையது என் தம்பி – வங்கியில் பணிபுரிபவன்- கொடுத்தது.

ஒருவரின் சட்டை சைஸ், பேண்ட் சைஸ் எண்ணால் வேறுபடுவது மாதிரி , பிளேசர் சைஸ் என்னவென்று கவனிக்காமல்  சென்றுவிட்டேன். ஆனாலும் சேல்ஸ்மேன் அசரவில்லை. என்னை அளந்தார் – கண்ணாலும், இன்ச் டேப்பாலும்.

ஒரு சாம்பில் பிளேசரை கொடுத்து முதலில் அளவு சரி பார்த்தார்.
பொண்ணு பார்க்க போய்வந்த பின் கேட்பது மாதிரி என்னென்ன பிடிக்குது…சாரி எங்கெங்கெ பிடிக்குது என கேட்டு வைத்துக்க் கொண்டார். பின்னர் இன்னொரு சாம்பிள் கொடுத்து அளவு திருப்தி என்றானபின், ஒரு கேள்வி கேட்டார் பாருங்கள்….
“ எதுக்கு பிளேசர் எடுக்கறீங்க?”
மில்லியன் டாலர் கேள்வி என்பார்களே அது இதான்.
“ட்ரெயினிங்குக்கு” என்றேன்.
“உள் சட்டையை ‘டக்-இன்’பண்ணுவீங்களா, வெளியே விடுவீங்களா?”
“டக்கிங் தான்..”
“வழக்கமான சட்டை லைட் கலரா, டார்க் கலரா…எந்த ரகம் நீங்க?”
“ஏப்பவும் லைட் கலர்தான் என் சாய்ஸ்”
“எத்தனை  நாளைக்கு ஒரு முறை பிளேசர் தேவைப்படும், அதாவது எத்தனை  நாளைக்கு ஒரு முறை பயிற்சி வகுப்பு எடுப்பீங்க? “
“ வாரம் ஒன்ணு, ரெண்டு……சமயத்தில்  பத்து நாள் கழிச்சி…..”
“டை கட்டும் வழக்கம் ……….….”
“வெயிட்…வெயிட்……..எனக்கு பிளேசர்தான் வேணும், நீங்க கேட்பதெல்லாம் பார்த்தால் எனக்கு பர்சனாலிடி டெவெலப்மெண்ட் கிளாஸ் எடுப்பீங்க போல….?”
“ சாரி சார்…..இதை வெச்சுத்தான், மெடீரியல் கலர், பிளெண்ட், குவாலிட்டி, விலை எல்லாம் நான் உங்களுக்கு சகெஸ்ட் பண்ணலாம்…….”
கடைசியாக ஆறாயிரம் ரூபாய்க்கு ‘பிளேசர் செட்’ – கிரே கலரில், ரயான்-பாலி பிளெண்டில் எடுத்தேன்…ஆச்சு ஆறு வருஷம்…உழைக்குது !
இதை எப்படி ஆன்லைனில் எதிர்பார்க்க..?

54 மில்லியன் இந்தியர்கள், தங்களின் முதல் அனுபவத்திற்குப்பிறகு ஆன் லைன் பொருள் வாங்குதலை நிறுத்திவிட்டதாக, Bain & Company, Google & Omidyar network இணைந்து வெளியிட்டுள்ள ‘Unlocking Digital for Bharat’ தகவல் தந்துள்ளது ( தகவல் உதவி – கட்டுரையாளர் ஹரீஷ் பட் – பிசினஸ் லைன் )  
நமது விற்பனையாளர்கள் தரமான பொருளை அனுப்புவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர் மன நோயாளி மாதிரி ஆன் லைன் பர்ச்சேஸாளர்களை ‘ஞே’ என்றுதான் பார்க்கிறார்.

பிளிப்கார்ட்டில் செல்போனுக்கு பதிலாக செங்கல் வந்த கதை இணையம் எங்கும் சக்கைபோடு போட்ட சமாச்சாரம். புளூடூத் ஒன்றை வாங்கி, அரைமணிக்கும் மேல் அதில் சார்ஜே  நிற்காத கதையும் என்னிடம் உள்ளது. சர்ட் வாங்கிய சலங்கைஒலி கதையைத்தான் மேலே படித்தீர்களே !

ஆனாலும்  தரக்குறைப்பாட்டை திருப்பி எடுத்துக்கொள்வதில் படு மோசமான சிக்கல் இரு பக்கமும் இருக்கிறது. ‘பார்க் அவென்யூ’ ஷர்ட் ஒன்றை கடந்த பொங்கலுக்கு என் தம்பி வாங்கி எனக்கு பரிசளித்தான். இரண்டு கையும் இருவேறு  வித அளவுகளில் இருந்தது மெடிக்கிள் மிராக்கிள் வகை. அதை நேரடியாக கடைக்கே போயும் ரிடர்ன் செய்ய இயலவில்லை. ஆன்லைனுக்கு இங்கே நிகருண்டு காண் என புதிய பாரதியை தட்டி எழுப்பலாம்.

அடுத்து என் பிளேசர் அனுபவம். அதை எந்த ஆன்லைன் வர்த்தகரும் தர வாய்ப்பே இல்லை. குறிப்பாக பெண் வாடிக்கையாளர்கள் இந்த நேரடி அனுபவத்தின் அடிமைகள். அவர்களை திருப்திப்படுத்துவதற்கு ஆன்லைனில் தனி கோர்ஸ்தான் நடத்த வேண்டும்.

பொருளை வாங்கும்தன்னை மகாராஜாவாக மதிக்க வேண்டும் என்றே ஒவ்வொரு வாடிக்கையாளரும் விரும்புகிறார். 

ஆனால், ஆன லைனில் அவரின் தகவல்கள் திருடப்பட்டு, அவர் என்ன தேடினாரோ, அது தொடர்பான பொருட்கள் மீண்டும் மீண்டும் அவரது பார்வைக்கு கொணரப்பட்டு, ‘வா கொமாரு, வந்து என் கிட்டே ஏமாறு’ என ஒளிவு மறைவின்றி அழைக்கப்படுகிறார்.

ஆன்லைன் வாங்குதலில் வாடிக்கையாளருக்கு அனுபவம் என்று எதுவுமே கிடைப்பதில்லை. பொருள், அதற்கான காசு, அதை கொடுப்பதில் உள்ள எளிமை’ இவ்வளவே அவர் அடைவது.

கடைக்காரரிடம் பேசுவது, உடுத்திப்பார்க்கும் பிரைவசி அனுபவம், பல கலர் செலெக்ஷன், தேர்வுகளில் பல்வேறு வாய்ப்புகள்……இதெல்லாம் ஆன்லைனில் அரிதினும் அரிது.

சேற்றிலே செந்தாமரையாய் சில நல்ல புதுமையான ப்ராடக்டுகள், எளிய விலையில் கிடைப்பதை இல்லையென்று சொல்ல முடியாது.
இயன்றால் அதைப்பற்றியும் கதைக்கலாம்.

Comments

Popular Posts