என் மொபெட் - பைக் ஆன கதை !


திருப்பூர் போனபின்புதான் சைக்கிள் சொந்தமாக வாங்கவேண்டியிருந்தது. சைக்கிள் இருந்தால்தான் வேலை. அம்மா கொடுத்த ஆயிரம் ரூபாய் கை கொடுத்தது. ஒரு வருசம்தான். அதன் தேவை குறைந்துவிட்டது. கம்பெனியிலேயே ஒரு பைக் கொடுத்தார்கள். YEZDI – (புல்லட் கம்பெனி) என்று நினைக்கிறேன். அதை உதைக்கவேண்டி ஒரு ஷூ வாங்கினேன். Tafeta Garments –ல் நண்பன்(ர்?) நாராயணனுடன் உழைக்கும் பங்குதாரராக ( கஷ்டக்கூட்டு என்று எங்க ஊர்பக்கம் சொல்லுவாங்க – எத்தனை அர்த்தம் ?) இருந்த காலத்தில் நான் வீட்டில் சைக்கிள் வைத்திருப்பதை பார்த்துவிட்டு 5000 ரூபாய் கொடுத்து ( அப்ப TVS-50 விலையே ரூ.12000 தான் ) “நைட்டு லேட்டாத்தான வீட்டுக்கு வர? இது உதவுமில்ல?” என்று சொன்னதால் வீட்டுக்கு வந்த முதல் வாகனம் (16 செல்வங்களுல் வாகனம் ஒன்றாமே?) TN33C 4729. பச்சை கலர் வண்டி. பாக்கி 7 ஆயிரம் லோன். சேட்டுக்கு அந்த லோனை ரெண்டு வருஷம் அடைத்தேன். 97 ஜூன் - பெண் பார்க்கப்போன போது , ‘ஓஹோ, மாப்பிள்ளை வண்டி வைத்திருக்கிறாரா’ என்று சின்ன மாமனார் புளகாங்கிதத்துடன் (புளங்காகிதமா?) பேசியதை என் காதால் கேட்டேன். செப்டம்பரில் தான் கல்யாணம். வருங்கால மனைவியை அந்த வண்டியில் அமர வைக்க (வெட்கமாம்) படாதபாடுபட்டு கடைசியில் மிரட்டித்தான் உட்கார வைத்தேன். “ அப்பவே என்னை மிரட்ட ஆரம்பிச்சிட்டீங்க இல்ல?” என்று இன்னும் எனது பார்யாள் மலரும் நினைவாள். 98-ல் ஈரோடு காயத்ரி எக்ஸ்போர்ட்டில் வேலை. முதலாளி டி.வி.எச்சை விட சின்ன மொபட் வைத்திருந்தார். விசிட்டர்கள் ஒரு மாதிரி பார்த்தார்கள். கல்யாணத்துக்கு அப்புறம் அந்த வண்டியில்தான் சுற்றினோம். சினிமா பார்த்தோம். விசேஷங்களுக்கு பறந்தோம். வருடம் 2000 டிசம்பர் வாக்கில் ஒரு வியாபார உதவி செய்ததற்கு பிரதிபலனாய் நண்பர் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கவே, அதை வைத்து டிவிஎஸ்சை எக்ஸ்சேஞ்ச் செய்து எனக்கு மிகவும் பிடித்த கருப்பு கலரில் சூப்பர் எக்செல் வாங்கினேன். TN33 P1108. அப்போது ஈரோடு அனுபம் ஹேண்ட்லூம்சில் வேலை. லதா இதை நன்றாக ஓட்டி பழகிக்கொண்டாள். பழைய வண்டி மாதிரி இல்லாமல் கிக் பண்ணினால் ஸ்டார்ட் ஆகிவிடும் என்பது கூடுதல் சவுகர்யம். 2003 - டெக்ஸ்டைல் லேப். ஈரோடு பிரான்ச் மேனேஜர் பொறுப்புக்கு நேர்முகம். எல்லா பார்மாலிட்டீஸ்களும் முடிந்தது. கடைசியாய் கேட்ட கேள்வி என் வண்டியை மாற்றிவிட்டது. “மார்கெடிங் நீங்கதான் பார்க்கப்போறீங்க, என்ன வண்டி வச்சிருக்கீங்க?” “சூப்பர் எக்செல்...” “சரி, நீங்க 100 CC வண்டி வாங்கிக்கொங்க.....வண்டி அலவன்சாக கம்பெனி மாசம் 500 ரூபாய் தந்திடும்” இந்த முறை கையிலிருந்த எக்செல்லை எக்சேஞ்ச் பன்ணவில்லை. வீட்டு வேலைகளுக்காக லதா பயன்படுத்திக்கொள்ள விரும்பினாள். என்ன வாங்கலாம் என ஆலோசனைகள்...நண்பர் இளங்கோ ஒரு மெசேஜ் அனுப்பினார். Splendor is wonder என்று. 2003 ல் வாங்கினேன் - TN33 AB2671 2014 ஆகி இன்னும் சலிக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. என் இனிய இயந்திரா என்று அதைப்பற்றி தனியாக ப்ளாக்கில் எழுதும் அளவுக்கு அதிகம் உழைத்துவிட்டதாக நம்புகிறேன்.
அந்த டி.வி.எஸ் புகைப்படத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.

Comments

Popular Posts