கிறுக்குத்தனம் - பார்ட் 1

 சுவற்றில் இரட்டை வண்ணத்தில் வரைந்திருந்த, அல்லது வீட்டுக்குள் வீசப்பட்டிருந்த பிட் நோட்டிசில் இருந்த சிம்பிள் 'உதயசூரியன்' தான் எனது முதல் வரைதல் கலையின் பிள்ளையார்சுழி. சில கோடுகள் போதும்.

நான் திராவிடன் உணர்ந்ததும், திமுகாவாய் ஆனதும் எங்கே நிகழ்ந்தது என்று எப்போதும் தெரியாது.

வரையும் போது, முன்னால் இருக்கும் மலைகளுக்கும், பின்னால் இருக்கும் சூரியனுக்கும் சைஸ் லாஜிக் இடிக்கும் ..... என்றாலும் பிடித்தது.
அப்புறம் குமுதம் , விகடனில் வாரா வாரம் வந்த 'ஜெ...' கையொப்பமிடப்பட்டிருந்த கோட்டோவியங்களின் பெண்கள். அவர்களை வரைய பழகினேன்.ஜெயராஜின் பெண்கள் நவீனமானவர்கள். எல்லோருக்குமே அலட்சியமான கவர்ச்சி உதடும், கூர் நாசியும்....கொஞ்சமே கொஞ்சம் க்ளிவேஜ் .
அழகான பெண்கள் என்றால் மாருதியின் கைவண்ணம்தான். 'குண்டுப்பெண்ணே குண்டுப்பெண்ணே' பாட்டு இவர்களுக்குத்தான் பொருந்தும். கட் பண்ணி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு லவ் பண்ணலாம்.
ஜெ., மாருதி எல்லாரையும் கலந்து கட்டி அடித்தவர் ஓவியர் அர்ஸ் ...சில காலம் கோலோச்சினார்.....வார, மாத இதழ்களில்.
வண்ணங்களின் அரசன் என்றால் அது 'ம.செ.'தான். நவீனமும், அழகும் கொண்டு வரைவது மணியம்செல்வன் அவர்களின் வழக்கம். கல்கியில் தொடங்கி.....80-90களின் மாத நாவல்கள் இவரின் ஆட்சி.
இங்கேதான் கே.வி.ஆனந்த் நுழைந்து அட்டைகளை எல்லாம் வண்ண மயமான, கிரியேடிவ் போட்டோக்களால் நிரப்பினார்.
இவர்களைத்தாண்டி என் வரைதல் வெட்கப்பட்டு நின்றபோதுதான், Technical Drawing எனும் subject என் தொழில்நுட்ப பாடத்தில் முதலாம் ஆண்டில் ஆரம்பமாகி, மெசினை வரைவதே வாழ்க்கை என்றானது. என் கையெழுத்தும் அழகானது.
ஆகவே "ஆதவ கீர்த்தானாம்பரத்திலே.." என்றாரம்பித்து தலைப்புகளை மட்டும் அழகழகாய் எழுத ஆர்ம்பித்தேன்.அர்ஸ்தான் இங்கே குரு. மெய் எழுத்துகளுக்கு அவர் புள்ளி வைப்பது தனி அழகு.

நைலான் கயிறு, கொலையுதிர்காலம், வண்ணத்துப்பூச்சி வேட்டை, எப்போதும் பெண் எனும் தலைப்புகளில் இருந்த கவிதைத்தனத்தால் சுஜாதாவினேன். இன்றுவரை குரங்காய் அவருடன்.

அப்புறம் 'அடுத்த நூற்றாண்டு' எனும் அவரின் கட்டுரைத் தொகுப்பு என்னை குப்புறத்தொகுப்பியது.

அவரின் ஞாபகத்தில்தான் எனது பயிற்சி நிறுவனம் Dream Factory கனவுத்தொழிற்சாலை எனும் பெயர் கொண்டது.

ஒருபிடி சோறு, பிரம்மோபதேசம், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், எனும் ஜெயகாந்தம் நிரம்ப பிடித்திருந்தது. அவைகள் என் அப்பாவின் புத்தகங்கள். இருப்பினும் தலைப்பின் வசீகரத்தால் படித்தேன்...வனவாசம் மாதிரி.
மாத்தளை சோமுவின், 'அவர்களின் தேசம்' எனும் தலைப்புக்காகவே அந்த புரியாத புத்தகத்தை பிரிக்காமல் பல காலம் ....பி்ரியாமல் பலகாலம்.

படிக்கிற பழக்கமாய் மாறிய வரையும் பழக்கம் பாலாவின் கரையோர முதலைகளிடம் கொண்டு சென்றது. இதுவே என் பதின்மங்களில். 'உடையார்'முன் இல்லார் போல் நிற்க பாலாவின் எழுத்துக்களின் கருத்து காரணம்.

அர்த்தநாரீசுவரரை அர்த்தப்படுத்திய அவரின் 'தாயுமானவன்' என் ஆல்டைம் பேவரைட்.




பல கேனத்தனமான புத்தகங்களும் என் நூலகவரிசையில் அடுக்கப்பட்டிருந்திருக்கின்றன. 'ஒரு கார்ட்டூனும், சில வண்ண ஓவியங்களும்' எப்போது படித்தாலும் ஒரு பக்கத்துக்கு மேல் நகராது.

ஆனால் Pattukkottai Prabakar - செல்லமாய் ப.கோ.பி, வர்ணனையே இல்லாமல் கதை, எல்லாம் முயற்சித்திருக்கிறார். அந்த கால கட்டத்தில் பிசாசுத்தனமாய் அவரை வாசித்திருக்கிறேன். அவரின் 'புன்னகை தேசம், கண்ணாமூச்சி ரேரே, தட்ஸ் ஆல் யுவர் ஆனர், ஒரு விலையுயர்ந்த குற்றம்....' போன்ற டைட்டில்கள் , இன்னமும் நெஞ்சினிலே..நெஞ்சினிலே...

அவரின் தொடர் படிக்க வியாழன் வரும் விகடனை புதன்கிழமையே கடையில் கேட்டு வைப்பேன்.
வேட்டி, கோபல்ல கிராமம், கரிசல் கதைகள், வயது வந்தவர்களுக்கு மட்டும், கரிசல் காட்டு கடுதாசி பொன்றவை கொங்கு நாட்டுக்கு இப்படிக் கதைகள் இல்லையே என ஏங்க வைத்த கி.ரா. வகைகள்.

அவரின் எழுத்தில் இருக்கும் நக்கல், விளங்க வைக்கும் தொனி, மண்மணம்.........அப்பப்பா.....!


பின்னாட்களில் எஸ்.ராமகிருஷ்ணன் ( எனது இந்தியா,துணையெழுத்து, தேசாந்திரி......) கட்டுரைகளில் பித்தானேன்.


எதையோ சொல்ல ஆரம்பித்து, எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறேன். எங்கோ எழுதுகிற எழுத்தாளர்கள், கண்ணுக்குத்தெரியாத சில மாற்றங்களை நிச்சயம் வாசக நெஞ்சங்களில் நிகழ்த்துகின்றனர்....நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.

அந்த வகையில் பிரசுரகர்த்தாக்கள் 'கல்கண்டு' தமிழ்வாணணும், 'கிரைம் நாவல்' அசோகனும் ஒன்றுதான் என்பேன்.....நிச்சயக் கடவுளர்.

Comments

Popular Posts