அக்கினி நட்சத்திரம்

 எல்லா தேர்தலுமே போராட்டம்தான். ஆனால் இந்த தேர்தல் மட்டும் தான் போட்டி அதிகம் எனும் புலம்பல் மாதிரி, ‘உஷ்…அப்பாடா, இந்த வருஷம்தான் எப்பயும் விட வெய்யில் ஓவர்’ என்கிற பினாத்தல்கள் நம்ம காதில் கேட்க ஆரம்பித்துவிட்டது. இன்ஃபாக்ட் நமக்கும் அப்படி புலம்பனும் போலத்தானே தோன்றுகிறது ?

காரணம் இதோ பக்கத்தில் அக்னி நட்சத்திரம்.

அக்னி நட்சத்திரமானது வருகிற சித்திரை மாதம் 21 ஆம் நாள் (04.05.26) திங்கட்கிழமையில் தொடங்கி வைகாசி 14 வரை(28.05.26) வியாழக்கிழமை வரை நீடிக்கிறதாம்.

அ.ந. வானது வழமையாக 15  நாட்கள் உக்கிரமாக இருக்கும். ஆனால் இது 21 நாள் சமாச்சாரம், இந்த முறை 25 நாட்களுக்கு நீடிக்கிறது . நமது பஞ்சாங்கத்தில் இந்த தேதிகள் சரியாக கணிக்கப்பட்டு சொல்லப் பட்டுள்ளது.

 

கதைகேட்டு வளர்ந்த நமக்கு, இதற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கும் என்று தெரியாதா என்ன ?

 முன்னொரு காலத்தில் சுவேதகி என்ற மன்னன் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி யாகம் செய்தான். (எங்கடா கிடைச்சுது அவ்ளோ நெய் ? திருப்பதில நல்ல நெய்க்கு தட்டுப்பாடாம்)  ஊத்துன நெய்யை சாப்ட்டு அக்னி தேவனுக்கு மந்த நோய் வந்துருச்சாம்... கூடவே வயித்து வலியும் !

டாக்டர் தேடி, பிரம்மா கிட்டே போனாராம் அக்னி.

மூலிகைகள் நிறைந்த அடர்காட்டை தின்றால் ஜீரண உபாதை தீரும், வயிற்று வலியும் குணமாகும்னு பிரஸ்கிரிப்ஷன் கொடுத்திருக்கார் டாக்டர் பிரம்மா.

 

மருந்துக்கு நம்ம அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தார். முதல்வர் மருந்தகம் மாதிரி செலவு கம்மியோ என்ன்மோ…..ஆனா அது இந்திரனுக்கு மிகவும் பிடித்த வனம்ங்கிரதனால அவருக்கு காண்டு. எனவே அதை அக்னி பகவான் உண்ண முற்பட்ட போது, இந்திரன் பெருமழையைப் பெய் வித்து அக்னியை அடக்கிருக்கான்.

 

பலமுறை முயன்றும் அதேநிலைதான். வேற வழி இல்லாம அக்னி பகவான்   நேரா கிருஷ்ணரைக் கண்டுகிட்டு ஐடியா கேட்டுருக்கார். தனது நிலையைக் கூறி பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி கேந்திராக்கள் (PMBJK)  மாதிரி எதாவது ஹெல்ப் கிடைக்குமான்னு விசாரிச்சிருக்கார். எப்படியாவது காண்டவ வனத்தை உண்ண தனக்கு உதவுமாறு கேட்டுக்கிட்டாராம்.

 

ராஜ தந்திரி கிருஷ்ணர் அர்ஜுனனை, மோடி ராஜ்னாத்சிங்கை பார்த்தா மாதிரி அர்த்தத்தோடு பார்த்தார். உடனே குறிப்பறிந்த அர்ஜுனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். அதைத் தொடர்ந்து கிருஷ்ணர், காண்டவ வனத்தைப் புசிக்கும்படி அக்னி பகவானிடம் கூறினார்.

 

அக்னி சாப்பிடும்போது, இந்திரன் மழையைப் பொழியச் செய்ய, தமிழ்னாட்டுக்கு எந்த நிதியும் வராம நிதி அமைச்சர்  பண்றா மாதிரி, ஒரு துளி மழை நீரும் உள்ளே விழாதபடி செய்தான் அர்ஜுனன். செய்வதறியாமல் தவித்த இந்திரன், பூமிக்கு வந்து கண்ணபிரானிடம் முறையிட்டார்.

 

"கண்ணா, அக்னி பகவான் வளம் முழுவ தையும் எரித்தால், இதில் வாழும் உயிர்களின் நிலை என்ன? ஒருவேளை இந்த வனத்தைப் புசித்தும் அவரது பசி அடங்கா விட்டால் என்ன ஆகும்? வேறு காடுகளைத் தேடிப் புசிக்க ஆரம்பித்து விடுவாரே? அப்படியானால் என் நிலை என்ன? என்று வேண்டினார்.

 

எடப்பாடிக்கும், தினகரனுக்கும் பஞ்சாயத்து ஒரே ஆள் பண்ணா மாதிரி,அனைத்தையும் கேட்ட பரந்தாமன், டோல்கேட்டுக்கு புதுசு புதுசா ரூல்ஸ் கொண்டு வர்றா மாதிரி, அக்னி பகவானுக்கு ஒரு கட்டளை இட்டார். அக்னியே, எண்ணி இருபத்தோரு நாட்கள் மட்டுமே நீ காண்டவ வனத்தைப் புசிக்கலாம். அதற்குள்உன் வயிற்றுவலியும் தீர்ந்து விடும்.அதன் பின்னர், அர்ஜுனனின் சரக்கூடம் கலைந்துவிடும். பூமியைக் குளிர்விக்க இந்திரன் வருவான். அப்போது நீ இடைஞ்சல் செய்யக்கூடாது

 

சொன்னதெல்லாம் அப்படியே ஏத்துக்கற செங்கொட்டையன் மாதிரி அப்படியே செய்வதாக அக்னியும் வாக்களித்தார்.  அக்னி பகவான் தனது ஏழு நாக்குகளால் முதல் ஏழு நாட்கள் பூமிக்கு அடியில் இருந்த வேர்களையும் பூச்சிகளையும் , அடுத்த ஏழு நாட்களில் மேலே இருந்த மரங்கள்  செடிகள் ஆகியவற்றையும், கடைசி ஏழு நாட்கள் அங்கிருந்த பாறை களை விழுங்கினார் என்கின்றன புராணங்கள்.

காண்டவ வனத்தை அக்னி புசித்த அந்த இருபத்தொரு நாட்கள் தான் அக்னி நட்சத்திர காலமாம்

 

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த முதல் ஏழு நாட்கள் வெப்பம் சற்றே குறைவாகவும், அடுத்த ஏழு நாட்கள் மிக மிக அதிகமாக வும், கடைசி ஏழு நாட்கள் மீண்டும் மிதமா கவும் இருக்கும்.

 

அதே போல அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பு இந்திரன் பூமியைக் குளிர்விக்க மழையை பொழிவிப்பான் என்றும் சொல்கிறார்கள்.தேர்தல் முடிஞ்ச பின் எந்த எம்.எல்.ஏ. வருவாருன்னு நம்புறா மாதிரிதான் இதுவும்.

 

ஆனால், அகமும் புறமும் குளிரும் வண்ணம் தருமம் செய்து (தண் ணீர் பந்தல், நீர்மோர், செருப்பு, குடை, விலங்கினங்களுக்கு தண்ணீர் தொட்டி, தொப்பி, விசிறி ஆகிய, அன்னதான கூடங்கள், இளநீர் தர்பூசணி போன்றவை தானம், ) ஆகியவை கொடுத்து இறைவனை வணங் கி வழிபாடு செய்து, கத்திரி வெயிலில் கடவுள் அருள் பெறுவோம்.

Comments

Popular Posts