நல்லாத்தான போய்கிட்டு இருக்கு?






பேஸ்புக்கில் எப்படி ஹீரோவாக (அல்லது ஜீரோவாக) இருப்பது என்று இன்னும்பல பேருக்கு தெரிவதில்லை.

அதெப்படி பேஸ்புக் பத்தி தெரியாமல் பொழப்பு ஓடுதாம் ?

அழகு டிப்ஸ், ஆறுமடிப்பு (சிக்ஸ்பேக்ஸ்) டிப்ஸ், முதுகுவலி டிப்ஸ், மூட்டுவலி டிப்ஸ், அட அவ்வளவு ஏன், ஃபிகரை மடிக்கக் கூட டிப்ஸ் தரும்போது பேஸ்புக்கில் ஹீரோவாக டிப்ஸ் தரக்கூடாதா என்ன?

இதோ....சமய சஞ்சீவி.......!

காலை எழுந்ததும் :
“அன்பு பேஸ்புக் (இதை இப்போ முகனூல் என்று தமிழ்’படுத்தி’ இருக்கிறார்கள் நமது தமிழ் ஆஆஆவ்....ஆர்வலர்கள்) நண்பர்களுக்கு , இனிய காலை வணக்கம்” என்று போட்டு விட்டுத்தான் பாத்ரூமுக்குள் நீங்கள் நுழையவேண்டும். இல்லையேல் நீங்கள் ‘கசாப்’புக்கு கமிட்மெண்ட் கொடுத்தோர் வரிசையில் நிற்க வைக்கப்படுவீர்கள்.
நிம்மதியாக பாத்ரூம் போய் வந்தாச்சா? சரி. ஒரு காலைக் கடன் கழிந்தது. (நீங்கள் பாத்ரூம் போய்வந்ததை சொல்லவில்லை)

காப்பி, கீப்பி...? பழக்கமில்லையா? பரவாயில்லை.

இப்போது ‘நெட்’டை பாருங்கள். கை,கால்விரல்களில் நெட்டை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கண்ணை ‘நெட்’டை விட்டு எடுக்காதீர்கள். யாராவது பஹ்ரைனிலோ, சிங்கப்பூரிலோ, பதிவிட்டுக்கொண்டிருந்தால் ‘லைக்’ போடனுமில்ல?

(உள்ளூரில் எவனும் நம்மை லைக் பண்ணறவன் இல்லைன்னாலும், பேஸ்புக்கில் நம்மை ‘லைக்’ பண்ணித்தொலைக்க ஆளா இல்லை? விடுங்க பாஸ், இவிங்க எப்பவுமே இப்பிடித்தான்)

குளிக்கப்போகச் சொல்லி மனைவி கூப்பிடும்போது,இதோ வந்துட்டேன்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு போயிடக்கூடாது.அப்புறம் உங்க முகனூல் நண்பர்கள் உங்க பெயருக்கு நேரா பச்சைபுள்ளிய காணாம ஏங்கிப்போயிடுவாங்க பாருங்க?

அதனால, ‘எனதினிய முகனூல் நண்பர்களுக்கு (வாழ்க்கையிலமுதன்முறையாக) நான் குளிக்கப் போறேன்’ என்று-கடன் தொல்லையால் விஷம் குடித்து சாகப்போகிறவனெழுதுகிற மாதிரி- எழுதிவைத்துவிட்டு போகவும். அப்பாடா உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ‘என்னாச்சோ, ஏதாச்சோ’ என்கிற கவலை இல்லாமல் ப்ரீயாக தத்தமது வேலையைப் பார்ப்பார்கள்.

குளிச்சாச்சா?

சரி தொலையுது! இப்பிடித்தான் சில சமயம் நம்மை மீறின விஷயங்கள் (இதை ‘விடயம்’னு எழுதினா நீங்க சரியான தமிழ் ஆர்வலர்-கம்-பதிவர்) நடக்கும். எதையும் தாங்கும் இதையுமிருக்கனும்-இல்லைனா எப்பிடி பேஸ்ஃபுக்ல உறுப்பினரா இருக்க முடியும்?

ஆபிஸ் கிளம்பறீங்களா? 

வெளியே வேலை இருக்கா? மறக்காம நான் பள்ளிபாளையம் போறேன், பழைய பாளையம் போறேன்னு (எல்லாமே ரெண்டு கி,மீ.க்கு குறைவான தூரம்தான்... அல்லது அரைமணியில திரும்பற வேலைதான்,இருந்தாலும் வரலாறு முக்கியம்) ஸ்டேட்டஸ் போட்டுட்டுத்தான் கிளம்பனும். முடிஞ்சா நீங்க போற வண்டியை -அது கவர்ன்மெண்ட் வண்டியோ,கார்பரேஷன் வண்டியோ-ஒரு புகைப்படம் போட்டு அலிபி கிரியேட் பண்ணனும். கரெக்டா நடந்துக்கறறோமாம்.

“ஊருக்கு போய்க்கொண்டிருக்கிறேன்...மடிக்கணிணியில் பதிவிடுகிறேன்” .இப்படியே போகட்டும்.

மத்தியானம் நல்ல பசி. ஆனா இன்னும் லன்ச் டைம் ஆகலை, கொஞ்சம் கடுப்பாத்தான் இருக்கும். என்ன செய்யலாம்?

கொலைப்பசியை கொஞ்சம் கிரியேட்டிவா மாத்தலாம்.

எவன் மேலயோ இருக்கற கடுப்பை வேற எப்படி காட்டறதாம்?
‘இந்த சமுதாயமே செரியில்ல......மனுஷன் நடத்தையே சரியில்ல......சமீபத்தில் நான் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்த பொழுது’ன்னு ஆரம்பிச்சு, ஊர்,உலகத்திலுள்ள அத்தனை பேரையும் மானாவாரியா திட்டி ‘இப்படி இருப்பவனெல்லாம் ஒரு மனுஷனா,...’ன்னு கன்னாபின்னானு ஒரு பதிவை எழுதலாம். எழுதி?...வேறென்ன? ஷேர் பண்ண வேண்டியதுதான்.

உடனே இது ஊருல உள்ள அத்தனை அத்தனை நண்பர்களுக்கும் போகும். லைக்ஸ் பத்தலையா? Google+லயும் ஏத்த வேண்டியதுதான்.

எப்படா நம்மாளு பதிவான்...கமெண்ட் போடலாம்னு ஒரு (பொழுது போகாத) கூட்டம் காத்திகிட்டிருக்கும், அவங்களுக்கும் பொழுது போகனுமில்ல? லைக்ஸ்தான், ஷேர்ஸ்தான் !
திடீர்னு தேசநேசம் வரனும். அது சாயங்காலமா இருந்தாலும் பரவாயில்லை.
இந்திய நாடு என் வீடு....இந்தியன் என்பது என் பேரு(ரெஜிஸ்டெர்டு) என்று மெட்ராஸ்டாக்கீஸ் மணிரத்னம் மாதிரி அப்பப்ப (அப்பப்பா......) இந்திய பாசம் பொங்க எழுதனும். 

லைக்ஸ் எகிறிடும்.
தக்க மாதிரி சில புகைப்படங்கள் இருத்தல் நலம்.
வீட்ல பர்ஸ்ட் ஷோ போலாம்

னு சொல்லிட்டு வந்து, ஆபிசில மேனேஜர் பர்மிசன் தரலையா? கவலையை விடுங்க, இருக்கவே இருக்கு பேஸ்புக், எழுதிருவோம்.
ஆனா அதை நேரடியா எழுத முடியுமா?

கார்பரேட்,காம்ரேட் என்று எல்லா வார்த்தை பிரயோகங்களிலும் மேனேஜரை கண்ட மேனிக்கு திட்டி, அவரே படித்தாலும் புரியாத மாதிரி எழுதி, அப்டேட் பண்ண வேண்டியதுதான்.

உங்கள் ஆபிஸ் ரூம்,காரிடார், பியூன்,கார் நிற்கும் இடம் என்று எல்லா இடத்து போட்டோக்களையும் இடலாம். ஆனால் 

மேனேஜருக்கு (மட்டும்) தெரியாது. இந்த உலகத்தில் எப்படி எல்லாம் வேலையாட்கள் பளு ஏற்றப்படுகிறார்கள் என எழுதலாம்.கஞ்சம் கூட இரக்கமில்லாத உலகம் என திட்டலாம்.

Comments

Popular Posts