‘அந்த’ மாதிரி படம் பார்ப்பவரா நீங்கள்?


அண்மையில் எனது நண்பர் ஒருவர் தனது மகன் பற்றி சொன்ன விஷயம், இரண்டு ஆண்பிள்ளைகளின் அப்பாவான எனக்கு(ம்) சற்றே அதிர்ச்சி தருவதாக அமைந்தது.

அதிர்ச்சிக்கு காரணம்- கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் அவரது மகனின் கைபேசியில் இருந்த அந்த ஒலி-ஒளி படங்கள்.

அதைப் பார்த்த அதிர்ச்சியில் அவர் மீள முடியாதவராய், எப்படி அதை மகனிடம் பேசுவது என்பதும் தெரியாதவராய் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

எனக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

19 ஆம் நூற்றாண்டின் தந்தையாய் இருந்திருக்க வேண்டியவர் இவர் என்றே தோன்றியது.

இன்னும் இவர் அவர்களின் வலையுலகை கவனித்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

 ஏனெனில் எளிதில் மற்றவர்கள் ஊடுருவ முடிகிற கைபேசியிலேயே ‘அந்த’ மாதிரி படத்தை வைத்திருக்கும் பையன், வலைத்தளத்தில் அம்மாதிரியான படங்களைத்தானே அதிகம் பார்ப்பான்?

அவனுக்கு ஈர்ப்பு எதில் அதிகமோ அதில்தான் கவனமும் இருக்கும்?

நிறையக் கல்லூரி மாணவர்களிடம் அடிக்கடி அளவளாவும் வாய்ப்பும், சேர்ந்து பயணிக்கிற வாய்ப்பும் அதிகம் உள்ளவன் என்பதால் இந்த விஷயத்தில் அவருக்கு உதவிட எண்ணினேன்.

அவனிடமே இதைப்பற்றிப் பேசலாமா என்றால் நண்பரோ தடுக்கிறார்.
“வேண்டாம்பா,அப்புறம் அதை அவன் வேற மாதிரி எடுத்துக்கப்போறான்” -எனக்கொரு சந்தேகம் –என் நண்பருக்கும் இந்தப் பழக்கம் இருக்குமோ? இது கூட ஒருவித ஒட்டுவாரொட்டிதான்.

அவனிடம் பேசாமல் எப்படி அவனுக்கு தீர்வு கொடுப்பதாம். ‘மலைபடுகடாம்’ படித்து பொருள் புரிந்துகொள்ளலாம். ஆனால் மாணவன்-அதுவும் மகன் ......புரிந்துகொள்வது கடினம்தான்.

கல்லூரிவிடுதியில் விடுமுறை தினங்களில் காணொளிகாட்டி கொண்டுவந்து திரைப்படம் பார்க்க நேர்ந்தபோதெல்லாம்,இடையிடையே விடுதிகாப்பாளர் இல்லாதபோது நாங்களும் ‘அந்த’ படங்களைப் பார்க்க ஆர்வம் காட்டியதும் நினைவுக்கு வருகிறது.

ஆனாலும் ‘அந்த’ படங்களுக்கு மயங்காதோர் ஆர்? அதிக கதாபாத்திரங்களே இல்லாத படம்-இன்னொரு கதாபாத்திரம் தேவையில்லாத படம். இருவரை ரசிக்கவே நமக்கு கவனம் போதாத போது வேறு பாத்திரங்கள் எதற்காம்?

இருவரைத்தவிர திரையில் மூன்றாம் நபர் வருவது மிகக் குறைவு.

பதின்வயதில்தான் இப்படி இந்த மாதிரி படங்களின் மீதான  ஈர்ப்பு அதிகம் ஏற்படுகிறதா என்றால், இல்லை, ஐம்பது,அறுபது தாண்டிய வயதிலும் ‘இதில்’ ஆர்வமாய் இருப்பவர் பலர்.

பேரன் எடுத்த வயதில் பேரன் பார்க்கும் படங்களை தாத்தா பார்ப்பதா? ஆச்சரியம்தான்!

ஆனாலும் இது சமூக உண்மை!

அண்மையில் ஒரு தமிழ் முன்னணி நடிகர் தனக்கும் ‘அந்த’ படங்களைப் பார்ப்பதிலிருக்கிற ஆர்வத்தை வெளிப்படையாக ஒத்துக்கொண்டதே ஒரு ஆச்சரியம்தான்.அதிலும் ஆச்சரியம் அதில்தான் தனக்கு ‘எனர்ஜி’ கிடைப்பதாகச் சொன்னது.( தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருக்கிறதா? என்ன செய்வது கலிகாலம்- எனர்ஜியான் சாப்பிட வேண்டியதுதானே?)

முன்பெல்லாம் வெளினாடுகளில்தான் இம்மாதிரியான படங்கள் எடுக்கப்பட்டன. அதற்கான வசதியும் அங்குதான் இருந்தது. ஆனால் மண்மணம்( இதில் என்னப்பா உள்ளூர்த்தனம்?) - நம்மவர்களுக்கு வேலை வாய்ப்பு(?) -வளர்ந்துவிட்ட தொழில்னுட்ப அறிவு ( அவ்வளவு தேவையா என்ன?) – ஆகியவை உள்நாட்டிலேயே இப்படங்களை தயாரிக்க உதவுகிறது.

தூர்தர்ஷனில் ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டு, கொஞ்ச நாள் நாக்கை சப்புகொட்டி இந்தியாவே பார்த்தது. என்னவோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் தூர்தர்ஷனில் நடு ராத்திரி 12 மணி வரை விழித்திருந்து பார்த்தாலும் ஒரு சின்ன காட்சிகூட வருவதில்லை.

மகனுடன் கடையில்போய் குறுந்தகடு, படவட்டு வாங்க நேர்ந்தபோது ‘அந்த’ படம் வேண்டும் எனக் கேட்டால், நம்மை ஒருவிதமாய் பார்த்துக் கொண்டே சிரித்தபடி பேப்பரில் மடித்து தருகிறார்கள்.

 “என்ன சார் ஒரே மாதிரி சீரியலாய் வாங்குறீங்க? நிறைய வெறைட்டி இருக்கு,இதுல” என இலவச சட்ட உதவி மாதிரி சட்டென கிட்டா உதவியும் கிட்டுகிறது.

 என்ன செய்வது? இது மனித மனங்களுக்குள் இருக்கிற குழந்தைத்தனம்.
அதை எத்தனைகாலம்தான் பெரியமனுஷத்தன் கொண்டு மறைப்பதாம்?

ஒரு உண்மையை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
கிட்டத்தட்ட நானும் அந்த பிரபல நடிகர் மாதிரிதான், டாம் அன்ட் ஜெர்ரி படம் என்றால் உயிர்-
என் பையனுக்கும்! 

Comments

Popular Posts