ஆசை இல்லாத அய்யனார்






கண்களை உருட்டி,
காதுகள் அகட்டி
மீசை பெரிசாய் முகத்தில் வள்ர்த்து
அகோர அழகாய்
கைகளில் விலங்குடன், வேள் அரிவாளும்-
சாந்த உருவாய்
சட்டென வரம் தரும்
அய்யனார் அருகில்
நானும் அவ்ளும்!

“எதுக்கு இன்னிக்கி இவ்வளவு கூட்டம்?”
சட்டென எடுத்த எடுப்பில்
கேள்விதான் அவளுக்கு!

“ஒவ்வொரு நாளும் ஓரோர் தெய்வம்.
இன்னிக்கி தினம் இவருக்குத்தானாம்”
பதிலிருத்தபடியே பட்டியல் போடுகிறேன்.

‘ஆளாளுக்கோர் அந்தரங்க ஆசை-
இருக்கும் சிற்சில இச்சைகள் தீர்க்க
கடவுளைத்தேடி காவுகள் கொடுக்க
ஆசைகள் இல்லா ஆள் இங்கே யாரு?’

‘எதுக்கு இங்க பொங்க வைக்கிறீங்க,
இழுத்து வந்த ஆட்டுகுட்டியோட?’
கேள்வியொடொரு பெரியவரை அணுக,
‘பெரிய மவனுக்கு வெளினாட்டு வேலை-
சின்ன பயனுக்கு செவத்த பொண்ணுன்னு
மனு வச்சிருந்தோம்
மவராசனுக்கு.
கேட்ட படியே செஞ்சிபுட்டாரில்ல ?
பெரிய மவன் பெத்த
பேரப் பசங்களுக்கு காது குத்தி கெடா வெட்டறோம்.

அப்படியே இன்னும் ரெண்டு ஆசையிருக்கு
அதுக்குத்தான் பொங்களொட ரெண்டு மனு வச்சிருக்கு’

சொன்ன பெரியவரிடம்
சொல்லாமல் விடை பெற்று
அடுத்த குரூப்பிடம்
ஆராய்ச்சியை தொடர்ந்தோம்.

அங்கே ரெண்டு சேவல்கள் தயாராய்
‘என்னக்கா சௌக்கியமா?
என்ன சமாச்சாரம், இம்புட்டு தூரம்?’

கேள்விக்கும் முன்னரே பதில் பறக்கிறது!

‘அதையேன் கேக்குறீங்க தம்பி?
ஆளாளுக்கு சொன்னாங்கன்னு
ஆளுக்கு ஒரு ஏக்கரா வாங்கி
உழுது, விதச்சி, ஒக்காந்து பாத்தோம்.

அறுவடைக்கு தயாரா
மஞ்ச கெழங்கு மச மசன்னு நிக்கிதுங்க!
மகசூல் நல்லா நெறையனும்னு
மனசுக்குள்ள வேண்டிகிட்டு
அய்யனாருக்கு வேண்டுதல் ஒண்ணு!’

இப்படியே தொடர்ந்தது என்னோட வேலை!

அங்கொண்ணும் இங்கொண்ணுமா ஆசைகள் + ஆட்டுக் குட்டிகள்!

பெத்த புள்ளைக்கு படிப்பு ஏரலைன்னு ஒண்ணு;
பெருசா சொத்து சேர்லையேனு இன்னொண்ணு!

அடிச்ச காசை காப்பாத்துப்பான்னு ஒண்ணு;
ஆயுசு முடியாம ஆபரேசன் முடியனுமேன்னு இன்னொண்ணு!

ஈமுல போட்டதெல்லாம் இழுத்துட்டு போயிடுமோனு ஒண்ணு;
இழுக்க இழுக்க வந்துட்டே இருக்கனுமுன்னு இன்னொண்ணு!

எகிருது எதுக்கிப்ப கூட்டம்னும் பாத்தா
எம்.எல்.ஏ. நிக்கறாரு எம்டன் கணக்கா!
‘போட்ட கணக்கு தப்பக் கூடாது
மாட்ன எதிர்கட்சி தப்பிக்கக் கூடாது’ன்னு
அவருக்கும் ஒரு ஆசை வேண்டுதல் மனசுக்குள்ள !

‘வேண்டுதல் வேட்டை’ வேலை முடிந்து
வணங்கச் சென்றேன் அய்யனாரை!

வேண்டுதல் இங்கே யாருக்கு இல்லை?
தேவைகள் இங்கே யாருக்கு குறைவு?

தேடுதல் என்பது இருக்கும் வரைக்கும்
தேவையும், நுகர்ச்சியும்
தேவைதான் யாருக்கும்!

அப்படிப்பார்த்தால்
அத்தனை பேரிலும்
வேட்கையும், தேவையும்
வேண்டாத ஒருத்தர்
அய்யனார் மட்டுமே அந்த வகையில் !

ஆனால்……..

அவருக்குத்தான் இங்கே
ஆயிரம் ஆடுகள்;
சேவல்கள் , கோழிகள்!

ஆக்கிய பொங்களோடு
ஆயிரம் படையல் !

 ----------------------------------------------------

கண்களை உருட்டி,
காதுகள் அகட்டி
மீசை பெரிசாய் முகத்தில் வள்ர்த்து
அகோர அழகாய்
கைகளில் விலங்குடன், வேள் அரிவாளுமாய்-
சாந்த உருவாய்(?)
சட்டென வரம் தரும்
அய்யனார் அருகில்
நானும் …………..அப்புறம் நானும்!

Comments

Popular Posts